வியாழன், 21 ஜூன், 2018

ஓசை

தாய் வயிற்றிலிருந்து வந்த சிசுவதன் 
அழுகுரலில் கேட்கும் முதலோசை. 
கருங்கற்கள் அவை சிந்திச்சிதற 
சிற்பங்களை செதுக்கும் சிலையோசை. 
தன் குஞ்சின் பசியினை தணிக்க - அலைந்துதிரியும் 
காகமது கரையும் அதன் ஏக்கம் ஓசை. 
உலகுயிரை காக்க மேகமவை பொழியும்  
சிறுதுளி மழையிலும் கேட்கும் உயிரின் ஓசை. 
காதலனை எண்ணி கண்ணியவள் சிந்தும் 
கண்ணீரில் கேட்கும் ஆவலோசை. 
கரைசேர துடிக்கும் மீனவனின் துடுப்பில் 
விலகும்நீரில் கேட்பது உறுதியோசை. 
கள்ளம்கபடமில்லாது கண்முன்னே இருக்கும்  
குழந்தை சிரிப்பில் கேட்பது மழலையோசை. 
இவ்வாறு ஓசைகள் பலகோணத்தில் இருந்தாலும் 
இசையின் உயிர்துடிப்பாய் இருப்பது வாழ்வினோசை!





                                                                                                           - கிரிசேஷ் குமார்





சனி, 16 ஜூன், 2018

இன்பம்

கனவில் வரும் வண்ணமெல்லாம்
மனத்துள்ளே வெளிப்படுகின்றன
அதில் மலரும் கதைகளமதுவோ
கண்ணில் வந்து மறைகின்றன
ஏக்கம் கொண்ட எண்ணங்களெல்லாம்
எழிலழகுடன் தெரிகின்றன
அனைத்தையும் நானோ மறந்துகிடக்க
மழை சாரல் மனதில் பொழிகின்றன
மயக்கம் தரும் காலைப்பொழுதோ
கற்பனைக் கனவில் மிதக்கின்றன
கண்ணுலகில் நிறைவேறா ஆசைகள்
கனவுலகில் நித்தம் நடக்கின்றன.






                                                      - கிரிசேஷ் குமார்