புதன், 31 ஜனவரி, 2018

ம‌னம் மட்டும் இருந்தால்...

சிறையென தெரிந்தும் கூட,
சினத்தை தவிர்த்து இருந்திடவே...
இனிமை பல மறந்த மனமோ,
மந்திர வார்த்தைக்கு கட்டுப்பட்டது.
கனிகள் அவை கனிந்தும் கூட,
நுனிநாவில் சுவை இழந்ததன்றோ...
செவி கேட்கும் வார்த்தைகளெல்லாம்,
சிதறிக்கிடக்கும் சின்னங்களின் கோர்வையே.
இளைப்பாறும் உடலும் கூட,
ஊந்துளைக்கும் மனம் மட்டும் இருந்தால்!



                                                                                   - கிரிசேஷ் குமார்  

வியாழன், 18 ஜனவரி, 2018

புதையல்

தினமும் நோக்கும் கடிகாரம் கூட, 
சிறிது நேரம் கண்மூடி விழிக்கும். 
கிழவி அவள் பேசும் கதைகள்கூட, 
முற்று பெற்று முடிவை நாடும். 
நிம்மதியை தேடி ஓடும் நாம்மட்டும், 
அதனை நம்பியே நாட்களைக் கழிக்கிறோம். 
அலைந்துதிரிந்து நம்பிக்கையை கண்டெடுத்தோம். 
ஆனால், நிம்மதியை நாம் உணரமுடியவில்லை. 
"ஏன் ?", என்று யோசித்துப் பார்க்கையில், 
அனுபவிக்கும் காலமது நகர்ந்து சென்றது. 
மறுபிறவி எடுத்து வந்த நிம்மதியோ, 
நாம் இன்று விரும்பும் பணமாக மாறியது!   



                                                                                                   - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 5 ஜனவரி, 2018

எனக்காக...

செம்மை படைக்கும் வெப்பமதனில், 
கதகதக்க காட்டுக் குளிரும் சூழ, 
நிலவொளி வெளிச்சமது எங்கும் வீசிட, 
ஆற்றுநீரானைத்தும் மறுவுயிருடன் பாய, 
கண்மூடும் கதிர்மறைப் பொழுதில், 
அலைந்தோடும் மனம்தான் எனது. 
இமை மூடா எந்தன் கண் முன், 
எரியும் நெருப்பும் நடனமாடக் கண்டேன். 
கதை கூற முனைந்து நின்று, 
எம்முகத்தை ஒளிரவைத்தது அவ்விருளில், 
கண்முன் தெரிந்ததை பார்த்த நானோ, 
கண்ணுள் இருப்பதை அறிய முயன்றேன். 
நான் பார்த்த யாவும் ஓர் கதையாகயிருக்க, 
காண மறந்த கதைகள் பல - கண்டேன் 
கண் முன்தெரிந்த அந்நடனத்தில். 
இவையனைத்தையும் உணர்ந்த எனக்கு, 
' எனக்காக' என்னும் சொல்லின் பொருளை, 
கண்ணுள் காட்டியது சுடர்விடும் நெருப்பு!





                                                                                              - கிரிசேஷ் குமார்