யோசனைகள் பல இருந்தன ...
நடத்திக்கொண்டிருக்கும் பாடமும் புரியாமல்,
நடத்தும் ஆசிரியரையும் காணாமல்,
வகுப்பறை ஓரமாய் ஒன்றியிருக்கும்,
சன்னலுடன் ஓர் உரையாடல்.
சற்றும் கலங்காது உற்றுநோக்கினேன்.
ஒன்பது கம்பிகளுடன் இருந்த ஒற்றைச்சன்னலை...
சிறிது நேரத்தில் சட்டென்று ஒரு குரல்,
"நீ இருக்கும் இவ்வகுப்பில்,
பலரையும் நான் பார்த்ததுண்டு.
ஒவ்வொரு மாணவனிற்கும் ஒரு கட்டத்தில்,
தத்தம் வாழ்வை மாற்றும் ஏணியாக,
யான் அமைந்தேன்! அணைத்தேன் !
விருப்பமிருந்தால் என்னை நீயும்
ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தி,
உயரம் பல காணலாம் உன் வாழ்க்கையில்! ",
அது அந்த சன்னலின் மொழியென உணர்ந்தேன்.
பலரும் அதனைப் பார்த்திருப்பார்கள்,
நானும் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன் பின் தெரிந்த அழகினை உற்று.
ஆம் அதன் அகத்தின் அழகு!
என் மனம் மறுமொழிந்தது அதற்கு,
" நான் யோசிக்க பல இருந்தும்,
உன்னை ஏன் நான் காணத்துடித்தேன்?
இக்கதையெழுத நீ கூறினாயோ அல்லது
உன் அழகில் மயங்கிய என்
எண்ணம் எழுத நினைத்ததோ !
மாற்றாரும் பார்க்கும் உன்னை - நான்
மறுகோணத்தில் உணர்ந்தேன் உண்மையாக !",
புரிந்து கொண்டேன் ஓர் சிறு கோணத்தில் உன்னை.
"ஒவ்வொரு வெற்றியிலும் நின்று ரசிக்கும்,
பல தோல்விகளில் உடனிருக்கும் உறுதியாக,
உன் ஊக்கத்தை பார்த்து நான் வியந்தேன்! ".
சட்டென்று விழித்தேன் குறுந்தூக்கத்திலிருந்து,
பாடத்தை முடித்துச் சென்ற ஆசிரியரையும்
கவனிக்காது நான் - வைத்த கண் வாங்காமல்
அந்த சன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன் வழியே பின்புறம் தெரிந்த மரக்கிளை ஒன்று,
அசைந்து என் எண்ணத்தைக் கலைக்கும் வரையில்!
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக