புதன், 30 ஆகஸ்ட், 2017

எதிரொலி

எதிர் கண்ட எண்ணமெல்லாம், 
எதிரொலியாய் வந்ததெனக்கு, 
வாய் பேசா வார்த்தைகள் கூட, 
வடக்கிலிருந்து வந்தொலிக்க, 
வீணடிக்கும் சொல் பல இருந்தும், 
வருந்த வைத்தது இச்சொல் என்னுள். 
நான் பேசும் வார்த்தைகள் யாவும், 
ஒரு முறையோடு மடிந்துவீழ்ந்தன. 
அகல் பேசிய வார்த்தைகள் யாவும், 
பகல் முழுதும் பிணையக் கேட்டேன். 
எனது எதிரொலியை சமாளித்தாலும், 
எதிர்கொள்ளும் ஒலிகள் பல, 
சட்டென்று சாய்ந்தன என் மனதை. 
சிறுக சிறுக நான் பேசிய போதும், 
பெறுகிக் கேட்டது எந்தன் செவியில். 
ஆனாலும் என் மனம் முடியவில்லை... 
"ஒரு முகம் மடிந்த போதும், 
  மறுமுகத்தில் உன்னை பார் ", என்று 
பல ஒலியினில் ஓர் ஒலி கூறியது, 
அறிவொளியாக என்னை பார்த்து!




                                                                                          - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

அன்பின் ஆதரவு

கலங்கி தவிக்கும் விழிவழியே, 
கவலை தொலைக்க எண்ணம் ஏங்கும், 
நொறுங்கி கிடந்த மனம் துகள்களாய், 
ஒன்று சேர்க்க விளையும் ஏக்கத்துடன், 
நினைத்துப்பார்த்த கற்பனை உருவம்! 
கண் கசக்கி நிற்கும் என் முன்னே, 
உயிர் நீட்டிப்பிடிக்கும் நுனிப்புல்லினில், 
கருமேகம் கடந்து விழும் மழைத்துளியாய், 
விட்டுச் சென்ற முகங்கள் இருந்தும், 
முழு நேரமும் என்னை நினைத்தாய். 
முடிந்ததை நினைத்து அழுத என்னை, 
அமைதியாய் முடிந்தவரை சிரிக்கச்செய்தாய். 
அன்பின் உருவமான அது எனது, 
ஆம் என்றும் எனதாக இருக்க விரும்பும் நான். 
அதன் முகத்தில் பார்த்தேன் நான், 
என் அன்னையின் அன்பினை,
பிரியாது எந்நாளும் மாறாது நினைத்தாலும்.
அழகான நட்போ அன்பான காதலோ ?
இதனை ஆய்வு செய்ய மனம் இல்லை எனக்கு, 
தனிமையில் தொலைத்த என்னை, 
கண்டெடுத்து கொடுத்த அதனை, 
தொலைக்க மறுக்கிறேன் என்றும் என் வாழ்வில்!





                                                                                                - கிரிசேஷ் குமார்  

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கதை கொண்ட படமது ...

வண்ணங்கள் பல கலந்திருக்கும், 
வர்ணனைகள் சில மறைந்திருக்கும், 
இவை பேசிய சிறுகதைகள், 
கண்டவுடன் ஈர்க்கும் படமல்ல அது. 
கற்பனையுடன் காட்சி தந்து, 
கனவில் கலையாது நிமிர்ந்து நின்று, 
என்னிடம் ஏதோ வினவிய படமது! 
வண்ணங்கள் பூசும் அழகுடன் இருந்தும், 
வணிக நோக்கம் எதுவும் இல்லாமல், 
கசந்த உண்மையை காட்டிய முகத்தில், 
கரை படித்தவர் எவரோ எவரோ...?
கடற்கரை மணலில் செதுக்கிய- கலைமதியான  
சிற்பங்கள் அதனை கேட்கவில்லை. 
அங்கிருந்த கண்ணகி சிலைக்கும், 
காந்தி சிலைக்கும் அது தெரியவில்லை. 
கேட்டது என்னிடத்தில் அந்த சோகம்நிறைந்த,
கசக்கி எறியப்பட்ட அந்த காகித புகைப்படம். 
பதில் சொல்ல முடியாது திகைத்தேன், 
அதன் அழகை உணர்ந்து உற்று நோக்கியபடி! 




                                                                                   - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மனம்தானே... மாறிவிடும்!

சிந்தனைகள் பல உண்டு இவ்வுலகில், 
அவற்றில் சில கண்டேன் எம்மனதில்.
என் கண்ணில் தெரிந்த உலகமொன்று, 
நான் கனவு கண்டது மற்றொன்று. 
கிடைத்தும் கிடைக்காமல் இருக்கும், 
இருப்பது மறைந்துபோய் கிடக்கும். 
சிறுவயதில் அழுதேன் சிரிப்பதற்காக, 
இன்று நான் சிரிக்கிறேன் மனம்விட்டு அழுவதற்காக...!
 சிறிய உணர்வுகளை சிறைபிடித்தேன்,  
சிதறிய கவலைகளை நான் உணர்ந்தேன்.  

அன்பினை காட்டினர் எனக்காக... 
அரவணைத்துக் கொண்டனர் மனதார... 
பல இரவில் கண்ணீர் வடித்தேன் -ஆனந்தமாக 
இவ்வுலகில் எனக்கென்று இருக்கும் சிலரையெண்ணி! 
காலம் மாறியதை நானோ மறந்தேன். 
காணும்போதெல்லாம் மாறாதிருக்க,
கரையை காக்கும் கல் அல்ல அது. 
மனித மனம் தானே அதுகூட, 
மாற்றம் கண்டது ஒரு மாலையில்,
ஏற்றுக்கொள்ள மறுத்தது என் மனது. 
துள்ளிச் செல்லும் மானினைப் போல, 
துடித்து எழுந்திட நான் நினைத்தேன். 
முடியுமா என்று தெரியவில்லை, 
முடியும் வரை முயற்சிப்பேன் சளைத்திடாமல்!!!




                                                                                               - கிரிசேஷ் குமார்  

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சிறகுகள்

சிறகுகள் வேண்டும் எனக்கு, 
சட்டென்று பறந்துவிடுவேன், 
சோகத்தையும் மறந்துவிடுவேன்.
பொறாமைக்கொண்டேன் அப்பறவையைக்கண்டு, 
பறந்து செல்லும் பலநேரம், 
குறையாத உற்சாகத்துடன் நித்தம். 
தானாகப் பறக்கும் அதனைப்போல், 
தனியாக நகர முயல்கிறேன் நான். 
தடையற்று நீட்டும் அச்சிறகினில், 
தன்னம்பிக்கை தெரிகிறது அவ்வழியிலே. 
என்னை மதியா சுற்றத்தில், 
நிற்கவேண்டிய கட்டாயத்தில் தவித்திருந்தேன், 
என் செய்வதென்றறியாமல் நான். 
என்னை நான் தொலைத்தேன் அன்று, 
என் மனதை நான் மறந்தபொழுது. 
தெரியவில்லை  அன்றெனக்கு, 
அதற்கும் உயிர் உள்ளதென்று. 
அறியாத சிறுவனாய் நான், 
மயங்கினேன் என் முன் தெரிந்த 
அனைத்தினிற்க்கும் பயந்து சென்று. 
பறந்து வந்த பறவை அது, 
கற்றுத்தந்தது என் தேவையினை. 
இவற்றை நான் பள்ளியிலும் பயிலவில்லை, 
கல்லூரியிலும் கிடைக்கவில்லை. 
ஏன், என்னை சூழ்ந்ததே இருக்கும், 
எனது நண்பர்களும் கூறிடவில்லை. 
அன்று தான் உணர்ந்தேன் நான்... 
தனிமையின் இனிமையினை! 
அன்றெனக்கு சிறகுகள் முளைத்திருந்தால், 
பயந்திருக்க மாட்டேன் -நான் 
என்னை மறந்திருக்க மாட்டேன். 
அப்பறவைக்குத் தெரிய வாய்ப்பில்லை, 
என் மனமறிந்த துன்பத்தினை.. 
மடிந்து மறுபிறப்பில் நான் பிறந்தால், 
அப்பறவைப்போல் நானும் இருக்க விளைகிறேன், 
சிறகுகளுடன் நினைத்ததும் பறந்து செல்ல...!




                                                                                                  - கிரிசேஷ் குமார்