சனி, 30 செப்டம்பர், 2017

எதிர்பார்ப்பு !

ஏக்கமே ஏங்கும் அளவிற்கு,
எதிர்திசையில் எறிந்த கல்லாய்,
எனை மீறி மனதில் படிந்த எண்ணம் ஒன்று.
எதிர்பார்ப்புகள் ஏராளம்- ஆனால்
அதனை எட்டி பிடிப்பது தான் கடினம்.
ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பு "மீசை முளைக்காதா?",
என்று இல்லாத மீசையை முறுக்குவது.
மீசை முறுக்கும் அவன் தகப்பனின் எதிர்பார்ப்பு
தன் தாய் மடியில் கவலை மறந்து
மணிநேரமாவது நிம்மதியாக தூங்கிட.
வயதிற்கு வந்த பெண்ணின் எதிர்பார்ப்பு
பார்க்கும் கண்களெல்லாம் அவளை நோக்கிட.
அதே வயது இளைஞனின் எதிர்பார்ப்பு
அந்த 'அவள்' அவனை பார்க்கமாட்டாளா என்று.
நம்மில் சிலர் ஏங்குவது - தனிமையின்
சுகத்தினை நாமும் பெறவேண்டுமென்று.
இவ்வுலகில் பலர் ஏங்குவது - இருள்
நீக்கும் ஒளியாக ஒருவராவது தமக்காக
தம் வாழ்வில் நுழைவாரோ என்று.
ஒரு தோழனின் எதிர்பார்ப்பு  - தன் நட்பு
கடையளவிலும் தன்னுடனே நீங்காதிருக்க.
ஒரு மகளின் ஏக்கம் தன் தந்தையின் நிம்மதியாகும்.
ஒரு மகனின் ஏக்கம் தன் தாயின் அரவணைப்பாகும்.
இவ்வாறு ஏக்கம் , எதிர்பார்ப்பு என பல உள்ளன.
அவை அவ்வாறே நடந்தால் நல்லது.
ஆனால், அவையனைத்தும் நடக்கும் என்று
நம்பி எதிர்பார்ப்பது மடமையாகுமோ?
விடை தேட விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.
நம் எதிர்பார்ப்பு நம்முடன் இருக்கும் வரை
ஏக்கம் என்ற ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும்.
ஆனால், அது வெளி சென்று நடக்கவில்லையெனில்,
நினைத்த நிகழ்வெல்லாம் நிழலாக மறையும்!




                                                                                                  - கிரிசேஷ் குமார்      

திங்கள், 25 செப்டம்பர், 2017

கனவின் ஊக்கம்

கனவாக கலைந்ததே பெண்ணே !
கவலைகளெல்லாம் கனவாக கலைந்ததே பெண்ணே !
உன் விழி சிமிட்டும் தருணத்திலெல்லாம்,
வியர் மூச்சும் நிற்பதைக் கண்டேன்.
நீ பார்வையில் பேசிய வார்த்தைகளெல்லாம்,
வளையிட்டு பிடித்தது என்னை அக்கணமே,
எனது உயிரின் முழு மூச்சாக நீ தெரிந்தாய்...
என்ன வீசினாய் என் விழி முன்னே ?
மறைந்து கிடந்த என் மனதை,
தேடித் கொடுத்தாய் நீ அன்றே.
தொலைத்த இடத்தில் பார்த்திருந்தால்,
உன் முகத்தை அங்கே மறந்திருப்பேனோ ?
சுமை தாங்கி பார்க்கும் உன்னை, 
சளைக்காமல் ஒவ்வொரு நாளும், 
சிதறாத இமை எனது இமைக்காமல், 
கவலைகள் பலவிருப்பதை மறைத்து.  
வினை எல்லாம் வேகமாக என்னை, 
விட்டுச் சென்றது விரும்பியபடி.
நரகத்திலும் நான் இருப்பேன்,
உன்னுடனே நகர்ந்து சென்றால்.
கனவாக கலைந்ததே பெண்ணே !
கடல் முழுதும் தெரிந்ததே முன்னே !






                                                                                                  - கிரிசேஷ் குமார்  

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பிச்சைக்காரர்

சாலை ஓரத்தில் நின்ற ஒருவர்,
சதை தெரியுமளவில் உடை கிழிந்து,
சிகைத் தோற்றத்தில் கைகளை ஏந்தி,
நடபதறியாது மயங்கி நின்றும்,
கண்ணோரத்தில் உள்ள கண்ணீர் கூட,
கசிந்த இடம் தெரியாது  காய்ந்திருக்க,
முகத்தில் உள்ள ஏக்கம் குறையாது,
மனதில் உள்ள வருத்தம் முடியாது,
குரல் உயர்த்த முடியாத நிலையில்,
"அம்மா ! அய்யா !", என்று அவர்
கூச்சலிட்ட அந்நொடியிலேயே நொறுங்கினேன்!

தூய அன்பினால் மட்டுமே முடியுமோ ???
ஒரு காலத்தில் வந்தோருக்கெல்லாம்
வயிறு நிறைய அன்னமிட்ட கையது.
இன்று ஒரு பொழுது உணவுக்கு
துடிக்கும் தன் வயிற்றிற்காக,
மனம் வராமல் இருந்தும்,
பிறரிடம் கையேந்தும் நிலையில் அவர்...
தூக்கி வளர்த்த பிள்ளைகளெல்லாம்,
பொத்தி பொத்தி வளர்த்த தந்தையின்,
இருப்பை ஏற்க முடியாமல்,
அவர் கூறிய கருத்துக்களைக்கூட,
கேட்க நேரமில்லாத அவர்கள்,
வளர்த்த பாசத்தையும் மறந்து,
வீதியில் இடமளித்தனர் விறுவிறுப்பாக...
அவர் சொத்தையும் எடுத்துக்கொண்டு,
அன்பையும் பறித்துக்கொண்டு - தகப்பனிடம்
சோகத்தை மட்டும் விட்டுச் சென்றனர் .
சொத்தாக ... அவர் சேர்த்த சொத்தாக...
தம் குழந்தைகளை உயிராக வளர்த்தவர்
வீதியில் நின்றிருக்க - அவர் நினைவு கூட
இல்லாமல் இருக்கும் அவர் பெற்றெடுத்த
பிள்ளைகள் தமக்கென வாழமுற்பட்டனர்.
இவர்களில் யார் பிச்சைக்காரர் ???
தூக்கி வளர்த்த தந்தையா ????
இல்லை தூக்கி எறிந்த பிள்ளைகளா ???
இதனை யோசித்த என் கண்களில்,
அவர் சிந்த நினைத்த கண்ணீர் மட்டுமே கசிந்தது!




                                                                      - கிரிசேஷ் குமார்







சனி, 9 செப்டம்பர், 2017

பேனா முனை

முனை அறிய ஒரு முனையில், 
பட்டையாக தீட்ட உதவி செய்து, 
எண்ணங்களை எழுத்தாக மாற்றி, 
கலந்த பல உணர்வோடு ஊட்டி, 
என்னை நான் இவ்வுலகிற்கு காட்ட, 
என்னுள் தோன்றிய சில கருத்துக்களை, 
கதைக்களமாக்கி புரியவைக்கும், 
புரியாத புதிர் என்று நான் என்னும், 
என் கையின் ஓர் அங்கமாக, 
மெதுவாக நகர்த்தும் நின் விரலை, 
நிற்காது பாயும் துன்பங்கள் பல, 
துடைத்தெடுக்கும் கருவியாக நீ, 
என்னுள் ஒன்றாய் , ஓவியமாய்...
மறைந்திருந்து எனக்கோர் பெயராக, 
நீல நிற குருதியுடன் என், 
மன வலிமைகளையும் பல மெருகேற்றி, 
என் கையை நீ பிடித்து, 
வளைந்துக் கொடுத்தாய் நீ எனக்கு, 
வல்லமை வகுத்தது உன் எழுத்து, 
தண்ணீரை தாங்கும் வெண்முகிலைப்போல, 
சிலரில் ஒருவனாய் என்னையும் மதித்து, 
வல்லினமாக என்னிடம் நீ வந்தடைந்தாய். 
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து, 
எனக்காக உழைக்கும் எனது, 
பேனா முனை நோக்கி நான் வியந்தேன் !





                                                                                  - கிரிசேஷ் குமார் 

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

அவள்

சதை கோர்த்த செங்குருதியில், 
சிலை வடிக்கும் சிற்பி அவள். 
நிறை ததும்பா ஆழ்கிணற்றில், 
நீர் வார்க்கும் செல்ல மகள். 
முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில்,  
மதி குனிந்தது அவள் முகம் கண்டு. 
புள்ளி மானென பார்த்தேன் அவளை, 
பதுங்கிப் பாயும் புலியின் முன்னே. 
பயந்து ஓடும் அதன் மனதினைப்போல், 
பதறியது என் உள்ளம்- அவள் 
கண் சிமிட்டி அந்நொடியில். 
பேச பயந்தேன் நான் முதன்முதலில், 
பிணைப்பை உணர்ந்தேன் பழகிய நொடியில். 
என் மனதை புரிந்த அவள் உணர்வை, 
என்றும் மதிப்பேன் நான் மரியாதையுடன் ! 






                                                                                          - கிரிசேஷ் குமார்