ஞாயிறு, 31 டிசம்பர், 2017

இனம் தெரியாத உணர்வு!

பனிபடர்ந்த நுனிப்புல்லானது வெட்கம் சூழ புன்னகைத்த அந்த காலைப்பொழுதில் குளிரால் குறுகினான் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அகிலன். மயிர்சிலிர்க்க அவன் கனவு கலைந்து பொறுமையாக இருக்க ஒட்டிய தன் கண்களை திறக்க முயன்றான். அரைமூடிய கண்களுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்த அவனுக்கு " எட்டு மணி ஆச்சுடா நாயே! ", என்று அவனது அக்காளின் குரல் ஒலிக்க கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்ற நினைப்பு உயர்ந்தது அவன் மனதில். மூடிய கண்களை பட்டென்று திறக்க, சக்கரம் காட்டாத அவன் கால்கள் ஓடத்தொடங்கின. தன் தினசரி வேலைகளையெல்லாம் அரைமணிநேரத்தில் அரக்கப்பரக்க முடித்து புறப்பட்டான் கல்லூரிக்கு. அவன் தாய் சிவகாமி " டேய் சோம்பேறி காலேல செஞ்சிவெச்சத கொட்டிக்கிட்டு கெளம்பு ", என்று கடிந்தாள். அகிலனும் அவசரத்தில் சிந்திச்சிதறி சாப்பிட்டுவிட்டு ஓடினான். சாலை கடக்க பொறுமையில்லாமல் நின்றிருந்தான் அவன். தன் அருகில் ஒரு இளம்பெண்ணும், கண் தெரியாத ஒரு முதியவரும் நின்றிருந்தனர். எதிர்பக்கத்தில் பேருந்து வருவதை கண்ட அவன் சாலையை கடக்க முற்பட்டான். வேகமாக ஒரு இருசக்கர வண்டியொன்று தன்னருகில் வருவதை கவனிக்காமல் அவன் சாலையைக்கடக்க தொடங்கினான். இதனை பார்த்த அந்த பெண் அவன் பின் விரைந்து அவன் கையைப்பிடித்து இழுத்தாள். அதனால் எதிர்பாராமல் பின்னே நகர்ந்த அவன் தன் கண்ணிமைக்கையில் அவன் கைக்கடிகாரம் அந்த வண்டியின் மீது ஒரு நொடி உராய்ந்தது. ஓரமாக வந்த இருவரும் பதற்றத்துடன் நின்றனர். சிலிர்த்துப்போன அவன் , புன்னகைத்த அவள் முகத்தைக்கண்டு நிதானமடைந்தான். நன்றிகள் பல கூறினான் அவளுக்கு. அப்போது அங்கிருந்த பார்வையற்ற முதியவர் " பாத்துப்போடா தம்பி ", என கூறினார். அதைக்கேட்டவுடன் அந்த பெண் தன்னைமறந்து சிரிக்கத்தொடங்கினாள். பின் " நா வர்றேன் ", என்று கூறிவிட்டு திரும்பினாள் அவள். இன்பத்தில் இமைமூடிய அவன் கேட்ட முதல் சத்தம் " அம்மா !", என்று அந்த பெண் அலற, சட்டென்று முன்னே நோக்கினான். கண்ணாடி வளையல் சில்லுச்சில்லாக சிதற, தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தாள். அங்கிருந்தவர்களெல்லாம் கூட்டம் கூட, அதில் சிலர் " படுபாவி அவ மேல ஏத்திட்டு எப்படி நிக்காம போறன் பாரு", என்று அவனை சாடினர். இன்னும் சிலர் " அய்யோ பாவம்! ", என்று கூறி அவளை நோக்கி மரங்களைப்போல் நின்றிருந்தனர். இவற்றையெல்லாம் கண்ட அகிலன், மனம் பதபதைத்து அவளிடம் சென்றான். அவள் கன்னத்தைத் தட்டி அவளை எழுப்ப முயன்றான். அவளை தன் தோல் மேல் சாய்ந்து அமர வைத்துக் "கண்ண தொரந்து பாருங்க! உங்களுக்கு ஒன்னும் ஆகாது! கண்ண தொரங்க", என்று கூறினான். அருகில் இருந்த ஒருவர் "ஆம்புலன்ஸை கூப்டுங்க! ", என்று கூற இன்னொருவர் "தம்பி அவங்கள தூக்கு என் வண்டில ஏத்திட்டு ஆஸ்பத்திரிக்கு போய்டலாம் ", என்று கருணையுடன் கூறினார். அகிலனும் உடனடியாக மற்றவர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். அந்தப் பெண்ணுக்கு சிறிது நினைவிருந்தது. சுற்றி இரத்த கரையாக இருந்தன.அகிலனுக்கே தெறியாமல் அவன் கண்கள் கலங்க தொடங்கின. ஒருவழியாக மருத்துவமனையை அடைந்தனர். அந்தப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க அகிலன் அங்கிருந்த மருத்துவர்களை நாடினான். அவர்கள் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க, அகிலன் பதில் இல்லாமல் கலங்கிய கண்களுடன் தவித்தான். மருத்துவர் ஒருவர் "பரவாயில்லை,அந்தப் பொண்ண சீக்கிரம் கூட்டிட்டு வாங்க!", என்று கூறினார். கூட்டிச் செல்லும்போது அந்தப் பெண் கையசைத்து அகிலனை அழைத்தாள். அவனிடம் அவள் ஏதோ முனங்கினாள். அகிலன்தனக்கு கேட்கவில்லை என்று இன்னும் அருகில் சென்றான். அப்போது அவள், "தாமரை" என்று கூறிவிட்டு இரத்ததில் சிவக்க அவன் கண்ணத்தில் ஒரு முத்தமிட்டு மயங்கினாள். அகிலன் செய்வதறியாது உரைந்து நின்றான். மருத்துவர்கள் தாமரையை சிகிச்சை அரைக்குக் கூட்டிச் சென்றனர். தேம்பித் தேம்பி அழத்தொடங்கிய அவனை உடன்வந்தனர் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தனர். ஆறு மணிநேரத்திற்கு பிறகு,கண்ணீரெல்லாம் காய்ந்து வாடிய முகத்துடன் நடைபிணம் போல் இருந்த அகிலனிடம், சிகிச்சை அரையில் இருந்து வந்த மருத்துவர் "பயப்படத் தேவையில்லை,அவங்க பொழச்சிட்டாங்க போய் பாருங்க...", என்று மொழிந்தார். அக்கணமே அரைக்குள் அவளிடம் விரைந்தான் அகிலன்.தன் வலியையும் பொறுத்துக்கொண்டு அவனைப்பார்த்து "ஒன்றுமில்லை பயப்படாதே", என்பதுபோல் சற்று சிரித்தாள். பின் அவனை அருகில் கூப்பிட்டு "உன் பேர் என்ன ?" என்று அவள் பாதி மயக்கத்தில் கேட்ட அவன் கண்ணில் கண்ணீருடன் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து "அகிலன்", என்று மொழிந்தான். 





                                                                   - கிரிசேஷ் குமார் 


வியாழன், 21 டிசம்பர், 2017

சிரிப்பு

மந்திர தந்திரம் தெரியாமல் இருப்பினும், 
தந்திர மந்திரம் ஒன்றை நன்கறிவோம். 
வாழ்வென்பது புரியாமல் இருந்தாலும், 
இருப்பது எதற்கென்று தெரியாமல் திரிந்தாலும், 
சரித்திரம் படிக்க வழியில்லை என்றாலும், 
சரித்திரம் அமைக்க வழி ஒன்று கண்டாலும், 
சிரிப்பென்பதே விடையாக அமையும். 
பிறரை நமக்கு பிடித்திருந்தாலும்,
நம்மை பிறர்க்கு பிடித்திருந்தாலும், 
சிலர்மேல் நமக்கு கோபமிருந்தாலும், 
நம் இன்பத்தை மற்றவருடன் பகிரவும், 
நம் துன்பத்தை அவர்களிடமிருந்து மறைக்கவும்,
நமது முகத்தையே அவர்களுக்கு காட்டும் முகமூடியாக 
நாம் உபயோகிக்கும் அந்த தந்திர மந்திரமே சிரிப்பு!



                                                                                                     - கிரிசேஷ் குமார் 

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பாலம்

இடம்பெயர தவித்த மனதை, 
தடம் அமைத்து கூட்டிச்செல்லும். 
தவிப்பென்பதை மறைக்கச் செய்து, 
இதயம் துடித்த கணத்திலெல்லாம்,
கல்லென நின்ற மனத்துள்ளும், 
ஈரம் பாய நித்தம் நினைத்து,
நம்பிக்கையெனும் பாலம் அமைக்க, 
முயற்சித்தது எந்தன் உள்ளம். 
கல்லை கரைக்க வழியில்லதெனினும், 
அதனை நனைக்க வழி தெரிந்தது. 
ஒற்றுமை என்ற வார்த்தை ஒன்று, 
ஒருங்கிணைக்கும் பாலமே நம்பிக்கையாகும். 
சிதறி திரிந்த மனமும் முற்றும்  
பாலம் அதன்மேல் நித்தம் சுற்றும்.



                                                                                - கிரிசேஷ் குமார்    

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கதிர் "அவன் " காதல்

மதி மீது கதிரவன் கொண்ட காதல் 
காவிய கதையினும் பழமையாகும். 
அக்கதைகள் பல மாய்ந்தாலும் 
கதிர் "அவன் " காதல் மட்டும் மாய்வதில்லை. 
ஒருவன் தன்னை தாழ்த்திக்கொண்டு 
தன் காதலை நேசிப்பதுப்போல் 
காலை முழுதும் பறந்து விரிந்த தம் 
கதிர்களை - மலர்ந்த மாலையில் 
சுருக்கிக்கொண்டு அவ்விருளில் 
நிலவவளின் ஒளியழகினை பார்த்து 
மயங்கத் துடித்தான்...
தன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் 
காதல்கண்ணோடு அவனவளை 
நேசிக்கத்தொடங்கியபோது இவ்வுலகானது 
அந்த காதல் காவியத்தை பார்க்கப் பிறந்தது.





                                                                                            - கிரிசேஷ் குமார்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அன்பு

கதிரொளியில் பட்டுதிக்கும் தாமரை போல, 
மனக்கலக்கத்தால் சேர்ந்த கண்ணீரை, 
துடைத்தெடுக்கும் தூய அன்பாகும் அது.
கவலைகள் பல அது களையெடுக்க, 
கரையில்லாமல் நம்மிடமது கரையொதுங்க. 
மௌனம் மொழியும் வார்த்தைகளெல்லாம், 
கண்ணடித்து உணர்த்திடும் அது நமக்கு. 
அன்பால் மலரும் சிரிப்புகள் பல இருந்தும், 
அதனால் உருவெடுக்கும் கோபமும், 
அதற்கு காரணமாகும் பிரிவுகளும், 
தத்தம் வலிமைகளையெல்லாம் ஒருங்கிணைக்கும். 
சிறு சிறு சண்டைகளும் விழுதுகளே, 
வீரியமுடன் நிற்கும் அம்மரத்தின் 
விதையாக மலரும் பேரன்பினால்.
'மன்னிப்பு' என்ற ஒரு சிறு வார்த்தை, 
மக்களின் பிரிதலும் புரிதலும் 
அவர்களின் வாழ்வின் இருதுருவங்களாம்
என்பதை நமக்கு நன்குணர்த்தும். 
நம்பிக்கையுடன் கூடிய எந்த பாசமும், 
அன்பென்னும் தாயின் அடிமைகளாகும்!




                                                                                               - கிரிசேஷ் குமார்