நாள்தோறும் நாம் காண்பவைகளெல்லாம் உண்மையாகவே நாம் காண்பதில்லை. இது ஏன்? ஏனென்றால் நமக்கு இருக்கும் வேலை அப்படி என்ற சாக்கு நம் மனதில் வந்து நிற்கிறது. இவ்வாறு நாம் மறந்து போகும் ஒரு அடையாளத்தை பற்றி பாப்போம். வாழ்க்கை ஓடி ஓடி உழைப்பதற்கு மட்டுமே என்று கருதும் மாந்தர்கள் பலர் ஒற்றுமையோடு வாழும் இடமே குப்பமாகும். இங்கு வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பூர்வீக தொழில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். ஒருவர் கொத்தனாராக இருப்பார், ஒருவர் சாக்கடை சுத்தம் செய்பவராகவும் இருப்பார். இன்னும் சிலர் சுவரொட்டிகளை ஒட்டுவார் , சிலர் கிடைத்த வேலைகளை செய்யவல்லவராக இருப்பர். இவர்களின் பெயர்கள் மட்டுமே ராமசாமி, முனுசாமி, குப்புசாமி என்றிருக்கும். ஆனால், இவர்கள் செய்யும் வேலைகளெல்லாம் ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அந்நாள் முதல் இந்நாள் வரை இவர்கள் நிலை பரிதாபம் தான். நம்மில் பலரும் இவர்கள் வாழும் குப்பத்தை அங்கங்கு கண்டிருப்போம். ஆனால், அவர்களெல்லாம் 'ஏன் இவ்வாறு இருக்கிறார்கள்?', என்று சற்று சிந்தித்ததுண்டா??? இல்லையே , நமக்கு தான் நம் வேலையை பார்க்கவே நேரமில்லையே! அப்படி என செய்துவிட்டோம் நாம்? அவர்களைப்போல் ஒரு நாள் நம் வாழ்வில் உழைத்ததுண்டா? இல்லை, அப்படியே உழைத்துவிட்டால் அடுத்த ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுகிறது நமக்கு. ஆனால், அதே உழைப்பை தினமும் நமக்காக செய்யும் அவர்களை நாம் சற்றே ஏளனமாக கருதி மறந்துவிடுகிறோம். அவர்களெல்லாம் நகரம் முழுதும் பரவி வாழ்ந்திடலாமே, ஏன் அவர்கள் அவ்வாறில்லாது ஒன்றாக குப்பை என்று நாம் கருதும் குப்பத்தில் வாழ்கிறார்கள்? ஏனெனில், அவர்களுக்கு தெரியும் ஒருவருக்கு மற்றவருடைய உதவி தேவை என்று. இவ்வாறு வாழும் அவர்களிடையே ஒற்றுமை எனும் உறுதி இருக்கும். நாம் துறுநாற்றம் என்று மூக்கை மூடும் இடத்தில் தான் அவர்கள் உணவினை உண்பார்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இதனினும் கொடுமை என்ன என்று தெரியுமா? இவையெல்லாம் தம் கண்களுக்கு தெரியக்கூடாது என்று உயர்தர வர்கம் நினைத்ததால் தான் நாம் குப்பம் என்ற ஒன்றை தீண்டாமல் இருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் தம் வேலைகளெல்லாம் நிறைவேற ஆட்கள் தேவை ஆனால், அவர்கள் வாழும் குப்பமென்பது வேடிக்கைபொருளாகிவிட்டது. ஒருவருக்கு தம் பெயர் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறதோ அதேபோல் தான் குப்பம் என்பது அங்கு வாழும் அவ்வுழைப்பாளிகளின் அடையாளமாகும். இந்த குப்பத்தின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்ற கேள்வி நம்முள் பலருக்கு இந்நேரம் எழுந்திருக்கும். அவ்வாறு எழவில்லையென்றால் அந்த சிலர் ஊருடன் ஒத்து வாழ தகுதியற்றவராவார். சரி இந்த நிலை மாறுவது எப்படி? எனக்கு தோன்றிய சிறிய எண்ணம், நாம் ஒன்றும் பெரிதாக செய்யவேண்டாம். குப்பங்களையும் மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டால் போதும். அங்கு வாழும் மக்களுக்கும் சற்றே மரியாதை குடுத்து பழகினால் அவர்கள் வாழ்க்கை தரமும் நமது வாழ்கை முறையும் பல மடங்கு மேம்படும். எனவே, குப்பம் என்பது ஒரு அடையாளம் அதனை அழியாமல் காப்பதாலே அம்மக்கள் நமக்கு செய்யும் உதவிகளுக்கு நாம் செய்யும் சிறு கைமாறாக விளங்கும்.
- கிரிசேஷ் குமார்
- கிரிசேஷ் குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக