வெள்ளி, 30 மார்ச், 2018

துணிச்சல்

ஆற்றில் பாய்ந்த ஓடமொன்றில், 
ஒன்றுபடாத விரிசல் இருந்தது.  
அவ்விடத்தில் ஒரு மனத்தவிப்பு நிலவியது.
ஆம், ஒரு புறம் இருந்த சிலந்தி, 
அந்த விரிசல் நீரில் மிடைந்த எறும்பை கண்டு,
செய்வதறியாது திகைத்து நின்றது. 
நமக்கு அது சிறு விரிசலே என்றாலும், 
பதற்றம் நிறைந்த அவற்றிற்கு,
இக்கரையில் தெரியும் அக்கரையாகும்.
ஓடிக்கொண்டிருக்கும் ஓடத்தில் நீரானது சூழ, 
மிதக்க இயலாது தத்தளித்த எறும்பினை, 
எமனானவன் தன் பாசக்கயிறு வீசி சிறைபிடிப்பதற்குள் 
போராட்ட உணர்வுடன் அச்சிலந்தி,
வலை வீசி இழுத்தது தன் சக உயிரை காக்க. 
நீர்வலிமையில் நனைந்த வலை அது அறுபட, 
ஓரத்தில் நின்றிருந்த அச்சிலந்தியும் நீரில் விழுந்தது. 
இதை பார்த்த அந்த எறும்பானது, 
தன் உயிரை எண்ணி தளராது, 
சிலந்தியினை தன் மேலேற்றி கரைசேர்த்தது. 
அப்போது வரை அந்த எறும்பிற்கு தெரியவில்லை, 
தான் நினைத்தால் எதையும் செய்ய இயலுமென்று.


எந்த செயலாக இருப்பினும்,
"அதனை செய்வது கடினம்", 
என்று யார் வந்து உரைத்தாலும், 
அதனை செய்ய துணிவதே, 
அச்செயலின் வெற்றியாகும்.


                                                                                                      - கிரிசேஷ் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக