திங்கள், 31 ஜூலை, 2017

காற்றும் நட்பே !

காற்றும் நட்பும் ஒன்றென்பேன். 
காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது, 
நட்பில்லையெனில் உயிர் ஏதும் கிடையாது! 
கடைமூச்சுக்கூட காற்றினைக் காதலிக்கும்... 
கதை பேசிய கனவுகள் எல்லாம், 
தூய நட்பிற்கு உயிர் கொடுக்கும். 
மனதை கொள்ளை கொள்ளும் பூங்காற்றைப்போல், 
மதியை வென்றுகாட்டும் எம் நட்பு. 
காற்றினில் கலந்திருக்கும் துன்பத்தை, 
துடைத்து எடுத்து தோள்கொடுக்கும், 
துகில் மறையா நட்பெனது. 
சொல்லாத பல நன்றிகளால்,  
பிணைந்துகொண்டோம் ஒவ்வொருவராய். 
சூழ்ச்சி நிறைந்த இவ்வுலகில், 
அடிபட்டு நின்றோம் ஒருநாளில், 
துன்பத்தினில் வடித்தேன் ஆனந்தக்கண்ணீரை... 
பிரச்சனை பல தீர்த்த என் நட்பினைக்கண்டு. 
பிரிந்து செல்லும் முகில் அல்ல நாங்கள், 
சிறு சண்டை வந்ததும் பிரிவதற்கு! 
பலநாட்கள் பேசாது இருந்தால் கூட, 
மனதில் உள்ள அன்பென்பது தேயாது. 
தனிமையில் தவித்திருந்த போது,  
அனைத்துமாய் நின்றவள் அவளே! 
ஆதரவற்று துவண்டிருந்த போது,  
அரவணைத்துப் பேசியவன் அவனே! 
பால் வேறுபடாது பழகும் இன்பம், 
பெற்ற என் நட்பானது திளைத்து நிற்கும், 
காலங்களைக் கடந்த காற்றாக ....!



                                                                                - கிரிசேஷ் குமார்      

வியாழன், 27 ஜூலை, 2017

மீன்கள்

கண் மூடா கனவு காணும், 
திறந்த வாய் மூடித் திறக்கும், 
வண்ணம் நிறை உடலிற்கும், 
ஒளிந்துகொண்டு எட்டிப்பார்க்கும், 
கண்சிமிட்டி என்னை ஈர்க்கும், 
அமைதி என்னும் அன்பைப்பரப்பும், 
அணியாத நகைகளையும் தேடிக்கொடுக்கும், 
ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும், 
கரையோரம் கூடியிருக்கும் இவற்றைக்கண்டால், 
மீனாக மாறிவிடும் என் மனம் கூட !



                                                                                  - கிரிசேஷ் குமார்    

ஞாயிறு, 23 ஜூலை, 2017

மனமே மருந்து

கனவென்ற ஒன்றில் நான் வாழ்ந்து வந்தேன், 
வருவதும் போவதும் யாதென்று அறியாமல். 
கசப்பான ஒரு வாழ்வினை வேறு வழியின்றி நான், 
ஏற்று நடந்தது கூட தெரியாமல்... 
எண்ணமெல்லாம் கலங்கி நிற்கும், 
சிறு குட்டையாக தோன்றியது நான் பார்க்கும்போது! 
பெருகிக்கிடக்கும் ஆனந்தமும் தொலைவினில் கண்டேன், 
சின்ன சின்ன பிரச்சனைகளும் பெருகி வரப்பார்த்தேன். 
சிறு துரும்பிலும்  தனிமையை உணர்ந்தேன், 
சிதறிப்போன வாழ்க்கை என்று நினைத்த அதனை, 
நான் கண் விழித்துப் பார்க்குமாறு, 
பக்குவமாக பேசிப் பேசி - பிரிவினைகளை 
புரியவைத்து பாசமாக பழக வைத்து 
பல சுவைகளை அறிய வைத்தனர் புரியவைத்தனர், 
நானாக எனக்குள்ளே யோசித்துப் பார்க்க... 
நாடா ஒன்று தேடா கிடைக்காது.
நடந்து செல்லும் வழியில் கூட, 
அமைதி தரும் சில தருணங்கள் தமக்கிடையே மொழிந்துகொண்டது! 
அதனை பார்த்தபோது நான் கேட்டேன் எனக்குள்ளே, 
"நான் ஏன் எதிர்பார்க்கிறேன் ?",என்பதற்கு 
விடை தெரியாவிடினும் தவறில்லை! 
திரும்பிப்பார்க்க கூடாதென்று முடிவெடுத்தேன். 
கண் முன் தெரியும் ஒவ்வொரு நிகழ்விலும், 
நிழல் அகற்றி பார்க்க முயன்றேன். 
கனவென்பது கடந்து போனது. 
வாழ்வென்பது புரிய தொடங்கியது. 
"நான் யார் என்று நான் அறிந்தால் போதும்."
ஆம், விடையும் கிடைத்தது விடிவதற்குள்! 
தொலைந்து சென்ற ஆனந்தங்கள் கூடிவர உணர்ந்தேன். 
பெருகிநின்ற பிரச்னைகளெல்லாம்  பிரிந்து 
செல்வதை கண் முன்னே பார்த்தேன். 
கலங்கி நின்ற கண்களைத் துடைத்தபின்பு, 
பார்த்தேன் மரையிதழ் படிந்த குளத்தை! 
தெரியாத கவலையில்லை மறக்கமுயன்றேன், 
புரியாத வாழ்க்கைத்தன்னை அறிய முனைந்தேன் ! 



 


                                                                                               - கிரிசேஷ் குமார்  


வியாழன், 20 ஜூலை, 2017

வார்த்தைகள்

வார்த்தைகள் ... ஒவ்வொன்றும் ஓர் விதம்!
ஒரு மனதை புரிந்துகொள்ள ஏற்றது,
நிலை பெற்ற உண்மை வார்த்தைகள்.
நஞ்சூட்டி பேசிடும் வார்த்தைகளெல்லாம்,
இழந்துவிடும் அதன் மொழியின் உயிரை!
அவற்றை கையாளுவது ஓர் அரிய கலையென்பேன் நான்.
தோன்றுவதெல்லாம் பேசவிடாமல்  - நின்று
பொறுமையுடன் பொருந்துவதை கோர்த்து பேசினால்,
கடலலை போல் பொங்கும் அன்பு தன் நிலைகுறையாது.
கடைப்பொழுதில் காட்டும் சிரிப்பில் தெரியும்,
கவிதையாய் பொழியும் உயிர்பெற்ற வார்த்தைகள்.
வளைவு சுழிவு தெரிந்து பேசுவது சில,
வழியே இல்லாது பேசுவது பல.
கசங்கிப்போன நெஞ்சில் கூட -நிற்கும்
கனிவாக நாம் பேசும் சிறு வார்த்தைகள்.
கண் விழித்து பார்க்கும் பொழுது,
கனவாக களமிறங்கும் மொழிக்கதைகள்.
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள் பல இங்குண்டு,
அவற்றை எடுத்துக்கோர்க்கும் பாங்கினை,
சிறுகதையாக உணர்த்தும் வாழ்க்கை நமக்கு!
பிறர் மனம் உமியளவும் புண்படாமல்,
வாய் பேசும் வார்த்தைகள் பொய் என்று,
கண் காட்டும் வடிவம் சில நான் உணர்ந்தேன்.
கரைந்தோடும் கற்பனையாக கண்முன்னே,
ஒழிந்திருக்கும் வழிமுறைகள் பல உள்ளது.
காதலுடன் மொழியும் வார்த்தைகள் கூட,
கவி பெற்று அவை பேசும் வாய் திறந்து ...!




                                                                                - கிரிசேஷ் குமார்

சனி, 15 ஜூலை, 2017

காலத்தை கடந்த பெண்

நிழலில் வாழ்ந்த நதிமீனும், 
நீந்தி கடந்தன நிகளிருள் காலங்களை. 
ஆணின் அடிமை என்றழைக்கப்பட்ட அவள், 
அச்சாணியாக விளங்கும் நாட்கள் மலர்ந்தன. 
அடிபட்டு வீட்டினுள் முடங்கியவள்தான் -இன்று 
ஆசைப்பட்டதும் வெளியே வந்தால் துணிவாக. 
சமம் என்ற ஓர் வார்த்தை அன்று, 
வெறும் வார்த்தையாக இருந்தது. 
ஆனால், அதே சமம் என்ற வார்த்தை -இன்று 
உயிர் பெற்று எழுந்து நிட்கின்றது. 
எதிலும் குறைவானவள் அல்ல அவள், 
ஆணுக்கு நிகராய் எதையும் சாதிக்கும், 
மனவலிமை பெற்றவளாவாள் அவள். 
முதன்முதலில் இவ்வுலகை வியந்து பார்த்த அவள், 
இவ்வுலகம் அவளை திரும்பிப்பார்க்க செய்தாள் நின்று. 
நிழலுலகில் இருளாக  நின்றவள் அன்று ,
நித்தமும் திளைக்கிறாள் புகழ் நடுவில் இன்று. 
நித்தம் கண்ட கனவுகள் அனைத்தும் ,
மொத்தமாக அவற்றை செயல்படுத்தினால் இன்று. 
முறைவாசல் செய்துஇருந்த அவளை, 
முறை மாற்றி வளர்த்தான் அவள் தந்தை ஒருவன், 
பின் தோள் கொடுத்து நின்றான் அவள் கணவன் மற்றொருவன். 
இத்தனை காலம் அவள் முகம் பாரா அந்நிலவு, 
வெட்கத்தில் குனிந்தது அவள் மதி ஒளியைக் கண்டு. 
அடிமைப்பெண்ணாக இருந்த அவள் அன்று,
ஆளும் அரசியாக திகழ்கிறாள் அவள் இன்று .




                                                                                                     - கிரிசேஷ் குமார்     

திங்கள், 10 ஜூலை, 2017

ஓர் உள்ளத்திற்கு !

நொடி முள்ளாய் பறந்து செல்ல,
நேர்கோட்டில் நடந்து பார்க்க,
நுனிமுகத்தில் சிரிப்பை காட்ட,
நினைத்தவுடன் மனம்விட்டு பேச,
நின்மனதில் நான் வந்து நிற்க,
நினைவெல்லாம் உன்முகம் பதிய,
நிழல் என்னைத் தொடர்வதை சற்று 
நானும் பார்த்து ஊக்கமடைய,
நேரம் தந்த சுழற்ச்சி என்னுள்,
நிற்காமல் என்னை நகர வைத்து,
நீட்டிய கரத்துடன் நீ என்னை அணைக்க,
நித்தமும் விரும்பினேன் உன் அன்பிற்காக!





                                                                                                     - கிரிசேஷ் குமார்



வியாழன், 6 ஜூலை, 2017

மனம் பேசும் வார்த்தைகள்

எனக்கு பிடித்த முகம் அது!
ரசித்துள்ளேன் அதனை சில நாட்கள்,
கவலைகள் பல மறந்தேன் அதை பார்த்தவுடன்,
குளிர்ந்தது என் உள்ளம் கடலென பரவி,
கடந்து செல்லும் முகமல்ல அது!
பார்த்தேன் என் சிரிப்பை அம்முகத்தில்,
பகிர்ந்தேன் என் மனநிலையை முழுமையாக,
இன்று என்னுடன் இல்லை அம்முகம்...
தேடுகிறேன் அதனை கண்முன் தெரிந்தும்,
விடை கிடைக்கவில்லை.....
"ஏன்?", என்ற வினாவிற்கு மட்டும்.
விரும்பா வார்த்தைகள் சில கசிந்த பிறகு,
கசப்பூட்டியது என்னுள்ளத்தில் ஆழ்ந்து,
பின் தோன்றவில்லை அதை பார்க்கும் எண்ணம்.
ஆனால், இன்னும் என் மனம்
விலக மறைக்கிறது ...விலக்க மறுக்கிறது அதே முகத்தை! 





                                                                                              - கிரிசேஷ் குமார்



திங்கள், 3 ஜூலை, 2017

நான் என் மனதின் முகமா.....?

சிறைப்பட்டேன் அகத்தின் அடியில்,
ஆசைப்பட்டேன் மீளா அடைக்கலம் அடைய,
திகைத்து நின்றேன் என்னை அறியாது,
மனம் பேசா செயல் பல கண்டேன்,
மறை சூளுரை பற்பல கடந்தேன்,
மாசடைந்த மேகமது வீழ்த்தியது, 
அதன் அகத்தை தூய்மையாகி, 
மாரி பொழிந்த மழையாக இனிமையாய்! 
மடமை அறிந்த அந்த மனதின்,
முகமாக இடம்பிடிப்பது நானாக விரும்பி,
மாறுபட்ட சிந்தனைகள் சில உணர்ந்தேன், 
சிலிர்த்திடும் உண்மைகள் என்பதனை, 
பார்த்து ரசித்தேன் ஒரு சிறு ரசிகனாய். 
"நான் யார் ?", என்ற கேள்வி ஒன்றை 
கேட்கிறேன் எனக்குள் நானே. 
விடை அறியாது வினவினேன், 
வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து, 
வெற்றியின் முதல் அடி நோக்கி, 
சட்டென்று நகர்ந்து செல்ல...



                                                                                           - கிரிசேஷ் குமார்