வியாழன், 20 ஜூலை, 2017

வார்த்தைகள்

வார்த்தைகள் ... ஒவ்வொன்றும் ஓர் விதம்!
ஒரு மனதை புரிந்துகொள்ள ஏற்றது,
நிலை பெற்ற உண்மை வார்த்தைகள்.
நஞ்சூட்டி பேசிடும் வார்த்தைகளெல்லாம்,
இழந்துவிடும் அதன் மொழியின் உயிரை!
அவற்றை கையாளுவது ஓர் அரிய கலையென்பேன் நான்.
தோன்றுவதெல்லாம் பேசவிடாமல்  - நின்று
பொறுமையுடன் பொருந்துவதை கோர்த்து பேசினால்,
கடலலை போல் பொங்கும் அன்பு தன் நிலைகுறையாது.
கடைப்பொழுதில் காட்டும் சிரிப்பில் தெரியும்,
கவிதையாய் பொழியும் உயிர்பெற்ற வார்த்தைகள்.
வளைவு சுழிவு தெரிந்து பேசுவது சில,
வழியே இல்லாது பேசுவது பல.
கசங்கிப்போன நெஞ்சில் கூட -நிற்கும்
கனிவாக நாம் பேசும் சிறு வார்த்தைகள்.
கண் விழித்து பார்க்கும் பொழுது,
கனவாக களமிறங்கும் மொழிக்கதைகள்.
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள் பல இங்குண்டு,
அவற்றை எடுத்துக்கோர்க்கும் பாங்கினை,
சிறுகதையாக உணர்த்தும் வாழ்க்கை நமக்கு!
பிறர் மனம் உமியளவும் புண்படாமல்,
வாய் பேசும் வார்த்தைகள் பொய் என்று,
கண் காட்டும் வடிவம் சில நான் உணர்ந்தேன்.
கரைந்தோடும் கற்பனையாக கண்முன்னே,
ஒழிந்திருக்கும் வழிமுறைகள் பல உள்ளது.
காதலுடன் மொழியும் வார்த்தைகள் கூட,
கவி பெற்று அவை பேசும் வாய் திறந்து ...!




                                                                                - கிரிசேஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக