வியாழன், 30 நவம்பர், 2017

இனிமை

கருமுகிலும் நெஞ்சை வருடி, 
கதிர் மறைய ஆடை சூழ்ந்து, 
நிலமுழுதும் நிதானம் நிறைந்து, 
மனமெல்லாம் மகிழ்ச்சி பரவி, 
பரபரப்பான பொழுதை மாற்றி, 
சட்டென்று  கண்விழிக்க - ஆனந்த 
கண்ணீரும் என்மேல் பட்டுத்தெறிக்க,
காதலெனும் திரைகடலால் சூழ, 
அதிலிருந்து தப்பிக்க சிறிதும் நினைக்காமல்,
நான் அதில் முழுமையாக மூழ்க,
இனிமையான அந்த மழையில், 
என் மனதை நனைக்கக் காத்திருந்தேன் 
காதல் பேச பார்த்திருந்தேன்...!



                                                                                 - கிரிசேஷ் குமார் 

திங்கள், 27 நவம்பர், 2017

விழிப்பு

உணர்வென்று நினைக்கும் பொழுதில்
கனவாக கலையும் சுற்றத்தின் நடுவில்
தனித்து நின்ற ஒரு மரக்கிளையின் ஏக்கம்... 
தன்னை கண்டுகொள்ளாத உறவுகளை எண்ணி, 
தன்னுடன் இருக்கும் உயிரையெல்லாம் மறந்ததன்று. 
தம் விழிக்குத் தெரியாமல் தமக்கு
உதவிய அவ்வனைவரையும் அது
சிறு துரும்பாகவும் மதிக்காமல் இருந்தது. 
ஆனால்,  கவலையில் வாடிய அது
தன் வாழ்வின் ஒவ்வொருநாளையும்
வாழ்ந்ததாக தம்மையே ஏமாற்றிக்கொண்டு, 
வாழாதே கழித்தது மடமையுடன். 
திடிரென்று ஒருநாள் அது மடிந்தது
அதன்பிறகு மேலிருந்து பார்த்தபொழுது, 
தனது கண்முன்னே தெரிந்ததெல்லாம்
அதனிடம் வாழ்ந்த பறவைகளும், 
அதன் உணவாக இருந்துவந்த பூச்சிகளும் அதை விட்டுச் செல்ல மனமில்லாமல் சென்ற
அந்த காட்சி மட்டுமே....
இதனைக்கண்ட பிறகு துடித்தது அதன் உள்ளம்.!
இத்தனை நாட்கள் வீணடித்ததை எண்ணி...
வருத்தம் கொண்டு பயனில்லை என்பதனை
அறியாமல் அங்கும் உயிர்நீங்க ஏங்கியது மரக்கிளை...!
வாழும்போது நம் பார்வைக்கு தெரிவதைமட்டும்
பார்த்து மயங்கி ஏமார்ந்திடாது
நமக்காக வாழவும் சிலர் இருப்பார்கள் என்ற
சிந்தனையை மனதில் வைத்து நாட்களை கழித்தால்
அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமாகும்!!!



                                             - கிரிசேஷ் குமார்   

வியாழன், 23 நவம்பர், 2017

பதிவுகள் பல...

பக்கங்கள் பல இருப்பினும், 
பார்வையை ஈர்க்கும் இதழ் ஒன்றாகவே இருக்கும். 
அதில் சில வரிகள் சிரிக்கச் செய்யும், 
இன்னும் சில வரிகள் சிந்திக்கவும் செய்யும். 
இது போன்ற பக்கங்கள் சில இருக்கலாம் 
நாம் படிக்கும் அந்த புத்தகத்தில். 
ஒரு சிலவை சோகத்தில் ஆழ்த்தும், 
சில பக்கங்கள் நம்மை வழிநடத்த உதவும். 
காதல் கொள்ளும் பக்கங்கள் சில, 
கோபம் தனிக்கும் பக்கங்கள் பிற. 
பக்கங்கள் எத்தனை இருப்பினும், 
இடம்பெறும் வார்த்தைகள் என்பது 
புத்தகத்தின் உயிரை வளர்க்கும். 
படிக்கும் வாசகர் யவராக இருப்பினும், 
படித்து முடித்தவுடன் எண்ணுவது... 
முற்றுப்பெறாத புள்ளிகளாக திகழும் 
தத்தம் வாழ்க்கை பதிவுகளே...! 




                                                                                          - கிரிசேஷ் குமார்    
                                                                                       

ஞாயிறு, 19 நவம்பர், 2017

தோழி

திரிந்த திசை தெரியாமல் இருந்த என்னை, 
திரை திறந்து விழிக்கச் செய்தவள் அவள். 
செய்வதறியாது திகைத்தபோது, 
இன்செய்தால் நன்மை தருமென மொழிந்தாள். 
மலர்மேல் படர்ந்த வெண்பனிபோல, 
உணர்வெடுத்து ஊட்டினாள் என் தோழி. 
சிறுவண்டுகூட தேன் தேடி சுற்றியபோது, 
எனக்கென மட்டும் எனை சுற்றி நீ வந்தாய். 
கண்மூடி நம்புவேன் உன்னை என்றும்,  
உன் முடிவு என் முடிவாக அமைந்தாலும்கூட. 
கோபம் கொள்வேன் உன்னிடம் நான், 
உரிமையுடன் எனக்காக என்றும் நீ இருப்பாயென்று. 
சிலிர்த்து போன எந்தன் இதயமோ, 
துள்ளித் துடித்தது என்வாழ்வில் நீ நுழைந்தபோது. 
என்னை புரிந்து கொண்ட நீ எனக்கு, 
மறு அன்னையாக என் மனதில் பதிந்தவளாவாய்!



                                                                                                         - கிரிசேஷ் குமார்  

புதன், 15 நவம்பர், 2017

உயிரில் உணர்ந்த உறவு

என் முகம் மலர தினமும் துடிக்கும், 
தீர்வறியாது திரிந்த என்னை, 
தெளிவாக்கிய உள்ளம் அது தான். 
சிரிப்பென்பது மறந்த போது, 
மடமையாற்று சிரிக்க செய்து, 
சிறந்ததை தேடிய எனக்கு, 
சீரான வழியையும் காட்டி, 
கைகோர்த்து நடந்து வந்து, 
கடமை என்று நினைத்துவிடாது,
என்னையும் கருத்தில் கொண்டு,  
முழு அன்புடன்  நேசித்த மனமது. 
கண்ணீர் கடலில் தவித்த என்னை, 
காகிதக் கப்பலில் ஏற்றிக்கொண்டு, 
கரை சேர கூட்டிச் சென்றது, 
என் உயிரில் கலந்த என் நட்பு !




                                                                                   - கிரிசேஷ் குமார்  


நினைப்பதும் நடப்பதும்

நினைத்ததெல்லாம் நினைவாகுமா ?
நினைவுகளெல்லாம் நிஜமாகுமோ ?
இதனின் ஒரு எடுத்துக்காட்டாக என்
கல்லூரியின் கனவை பிறர் கூற நான்
என் செவியை இனிக்க விரும்பினேன்.

ஒரு நாள் இட்லி மாவு வாங்கி வர சென்றேன் ஒரு கடைக்கு.
இரு ஒரு கிலோவுக்கு மாவு மடிக்க சொன்னேன்.
அவர் ஏதோ என்னிடம் பல நாட்கள் பழகியது போல்
" என்னடா ஒரு திணிசாக கேட்கிற ?
நீ எந்த காலேஜ் படிக்கிற ? ", என்று
அவர் என்னிடம் உரிமையுடன் கேட்டார் . நானும் பொதுவாக
இல்லாமல் "CEG ல தான் படிக்கிறேன் " , என்று
தைரியமாக மறுமொழிந்தேன் . அவர் ஏதோ
நான் சொல்லகூடாதது சொன்னதுப் போல்
என்னை ஒரு விதமாக பார்த்து,
" அப்படி ஒரு காலேஜ் இருக்கா ? ", என்று கேட்க
அந்நொடியே என் தைரியம் அனைத்தும்
சில்லு சில்லாக நொறுங்க உணர்ந்தேன் .
பின் அதிர்ச்சியில் உறைந்த நான் சற்று
பயத்துடன் " அண்ணா யுனிவர்சிட்டி  ",
என்றேன் ஓரிரண்டு மூச்சில் .
"அப்பா ! நீ அங்கயா படிக்கிற?
உன்னப் போய் தப்பா  நெனச்சிட்டேனே!",
என்று அவர் கூற என் மனதில் ஒரு
எண்ணம் உதித்தது உடனடியாக.
" நா அப்படி ஒண்ணுமே செய்யலையே !",
என்றேன் என் மனதிடம் மெதுவாக.
"ஏன் அப்படி  சொல்றீங்க ?",என்று கேட்டேன்
அவரிடம் , மனதில் ஒரு சலனுத்துடன் .
அவர் " அட என்னப்பா நீயே இப்படி கேட்ட !
உன் கல்லூரிய பத்தி நா சொல்லித்தான்
தெரியனுமா ? உன் கல்லூரியில் சேர்ந்தாலே
வேல நிச்சயம் கெடச்சிடுமே!
படிக்கும் போதே பட்டம் வாங்குற மூளை ,
இங்க சேர்ந்தாலே வாழ்க்கை மாறிவிடும்,
நாலு வருஷம்  கழிச்சி உன்ன
கையில பிடிக்க  முடியுமா ???
இத்தனைக்கும் நீ படிக்கிறது அரசு
கல்லூரியாச்சே காச பத்தி கவலையா உனக்கு !",
என்று ஒரு பூரித்த முகத்துடன் கூறினார் .
அந்நேரத்தில் எனக்கு தோன்றிய எண்ணம் ஒன்றே !
வைகைப் புயல் வடிவேலு கூறுவது போல்
" இந்த உலகம் இன்னுமா நம்மல நம்புது ?",
என்று நகைத்தேன் உள்ளத்தினுள் .
ஆனால் அவர் கற்பனையில் உண்மையான ஒன்று
அரசு கல்லூரியில் சேர்ந்ததால் கட்டணம் பற்றி
பெரிதாக கவலை பட தேவையில்லை .
ஆனால், அப்போது வியந்தேன் நம் சமூகத்திற்கு
இவ்வளவு கற்பனைத்திறன் உள்ளதா என்று !
அதற்குள் அவர் மாவை கையில் கொடுத்துவிட்டார் .
நானும் வீட்டிற்கு திரும்ப முனைந்தேன் .
செல்லும் வழியில் யோசித்துப்பார்த்தேன் .
"நம்மில் சிலருக்கு பல்கலைக்கழகத்திற்கும்
கல்லூரிக்கும் வித்யாசம் தெரியவில்லையே !
மேலும் என் பல்கலையில் நான் படிக்கும்
கல்லூரியை சேர்த்து CEG, ACT, SAP என
மூன்று கல்லூரிகளுடன் கற்பக வனமாக திகழ்கிறது .
இதனை நம்மில் பலரும் அறிவாரோ ?
மேலும் பதினைந்திற்கும் மேற்பட்ட
பட்ட படிப்புகளுடன் மையம் கொண்டுள்ளது
இவர்களுக்கு தெரியாதோ ?", " ஏதோ
இங்கு சேர்ந்தவுடன் உயர்வதுபோல்
நினைக்கிறார்கள் , படாத பாடு பட்டு
படிக்கும் நமது நிலை நாம் மட்டுமே அறிந்தது !".
சிலர் சொல்வதை போல்  " சச்சினா இருந்தாலும்
சிக்ஸ் அடிச்சா தான் மரியாதை !".
இக்கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று
அவர்கள் அறியவேண்டும்.  ஆனால்,
பிற கல்லூரிகளை போல்  எல்லா நேரமும்
பாடம் நடத்த மாட்டார்கள் , மாணவர்களின்
மனதை புரிந்து பல இடைவெளிகளில்
சில பாடங்கள் நடக்கும் . ஆனால் , இடைவெளிகள்
பல நாம் நமதாக்கினால் பலரை விட பல
மடங்கு படிக்கலாம் இந்த உலகில் .
பாட்டு, நடனம் , விளையாட்டு ஆகியவை
எல்லாம் மாணவர்களே கற்பிப்பர் ,
கற்றும் கொள்வர் என்பது இங்குள்ள தனிச்சிறப்பு .
மனம் மகிழுமாறு சில ஆச்சரியங்களுடன் ,
பல ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டே இருக்கும் .
கதிர் உதிர்க்கும் ஒளியினில் பல
வெயில் இங்கு விளையாத அளவிற்கு
அடர்ந்த காடாகவே தெரியும் மேலிருந்துப் பார்த்தால்.
அக்காட்டுக்குள் வாழும் நாங்கள் அனைவரும்
நாகரீகமடைந்த காட்டு வாசிகளே !
" கற்பிக்கும் கடலாகும் இது ,
கற்றுக்கொண்டே கரை சேரலாம் ", என்ற
எண்ணத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து
கதவைத் தட்டினேன் .கதவைத் திறந்த
அப்பா ," வாடா தண்டசோறு , ஏன் இவளோ
நேரம் ?", என்று கதைக்க சிதறிய பல
உணர்வுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தேன் .



                                                                                                       - கிரிசேஷ் குமார் 

ஒரு மதில் கூறிய கதை...

என்மேல் அமர்ந்தான் ஒருவன் அன்று, 
தனிமையில் இருந்த சிற்றோனைக்கண்டு, 
கண்ணீர்த்துளிகள் உலகை ரசிக்க, 
கவலைமழையில் அவன்  ரசனை மறக்க, 
தன்னுடன் கதைக்க உள்ளம் ஏங்க, 
ஏமாற்றம் தந்த மௌனம் எனது. 
நிலவொளியின் வெளிச்சம் கூட, 
வீசவில்லை அவன் மனதின் நடுவில். 
என்மேல் படர்ந்த முள் செடியும்கூட, 
செவி சாய்ந்தன அவன் கண்ணீர்பட்டு. 
பேசமுடியா அசைந்த அவன் இதழும், 
இதயம் கதைக்க என் கண்முன் கண்டேன். 
அதை பார்த்த எந்தன் மனமோ, 
அவன் கண்ணீரைத்துடைத்து ஆறுதலளிக்க,
உயிர்பெற வேண்டி துடித்தது என்னுள்ளே!



                                                                                         - கிரிசேஷ் குமார் 

ஞாயிறு, 12 நவம்பர், 2017

உணர்வுகள்...

நம் உணர்வுகள் வேறுபட்டாலும், 
மனம் அவற்றை ஒருங்கிணைக்கும். 
மகிழ்ச்சியுடன் சிரிப்பவர்களைவிட,
பலர் இவ்வுலகில் தினந்தோறும்,  
துன்பத்திலும் புன்னகைத்து, 
பிறரை சிரிக்கவைக்கவும், 
தம்மவர்களுக்காக போலி எனும் 
முகத்திற்குப் பின்னே அழுதும்,
வருந்தியும் வாடிக்கொண்டிருப்பர்.  
இது 'தவறு' என்று கூறவே முடியாது. 
'மாற்றாரிடம் பகிர்வதில்லை' என்றும் 
அவர்களை எளிதில் குறைகூறவும் முடியாது. 
பிறர் துன்பத்தில் சிரிப்பவர்களை விட, 
பிறர் தம் துன்பத்தால் வருந்தாமல் இருக்க, 
நாள்தோறும் சிரித்து மறைப்பவர்கள், 
பல மடங்கு சிறந்தவராவார். 
ஒருவன் ஒரு விஷயத்தை உன்னிடம் 
கூறாது மறுக்கிறான்  என்று  
சிந்திப்பது நியாயம் தான் - அதற்காக 
அவன் மேல் கோபம் கொள்வதையெல்லாம்  
நான் தவறாக பார்க்கவில்லை. 
ஆனால், இவற்றையெல்லாம் செய்யும்முன் 
ஒரு நிமிடமாவது ஒதுக்கி, 
"அவன் ஏன் என்னிடம் கூறவில்லை ?",
என்று சிறிது யோசித்தாலோ அல்லது, 
அவன் மனநிலையில் சற்று நீங்கள் 
இருந்து சிந்தித்தாலோ உங்களுக்கே 
அந்த விடை கிடைத்துவிடும். 
அதன் பிறகு அவன் செய்தது தவறாயின், 
உங்கள் கோபம் நியாயமானது. 
அதிலும் கோபம் என்பது வெளிப்படையாக 
ஒருவருடன் காரணத்துடன் இருக்கவேண்டும், 
முதலில் அது அவற்றுக்கு தெரிந்திருக்கவேண்டும். 
ஆம், இப்புவியில் எல்லாவற்றிற்கும், 
ஒவ்வொரு வழிமுறை இருக்கின்றது. 
அதன் வழி செயல்படுவதே சிறந்தது. 
வெட்கம் என்பதும் இயல்பானதாகும். 
ஏன் சில வெட்கத்தில் அழகும், 
அதன் உடைமையும் வெளிப்படும். 
இது ஒருவர் மீதுள்ள பற்றுதல் காரணமாக,  
எல்லோருக்கும் வருவது இயல்பு. 
இதனால் அவரிடம் பயமும், 
பிணைந்துகொண்டே இருக்கும். 
அவை தவறில்லை -ஆனால் 
அந்த பயத்தை வளரவிடுவது தவறாகும். 
இவ்வாறு நான் கூறிய சிலவற்றைப்போல், 
இன்னும் பல பல உணர்வுகளை, 
நம் மனம் ஒருங்கிணைத்து சேர்த்துவைக்கும். 
"உணர்வுகள் பல விதம், 
ஒவ்வொன்றும் ஒரு விதம்",
இக்கூற்று எல்லோருக்கும் சரியாக பொருந்தும்.








                                                                                                         - கிரிசேஷ் குமார்

சனி, 4 நவம்பர், 2017

மனிதம்!

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும், 
ஒரு விதத்தில் நமக்கு சொந்தமாவார்கள். 
"அப்படி இல்லை", என்று சிலர் 
நம்முடன் முரண்படுவதும் கூடும். 
அதனால், உண்மை என்றும் மறையாது. 
காதல் என்ற ஒன்று -இன்று 
தனித்திரு ஆண் பெண்ணுக்குரியதையிற்று. 
இன்று காதல் என்ற கூற்றை கேட்டவுடன், 
சிலர் போற்றுவதும் உண்டு, 
சிலர் தூற்றுவதும் உண்டு. 
அது நாம் மாற்றிய சமூக நிலைப்பாடாகும். 
ஆனால், காதல் என்பது 
நிறங்களைக்கடந்து, மாந்தரை மறந்து 
மதம், இனம், மொழி என பல 
வேறுபாடுகளையும் களைந்து, 
அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, 
காலத்திற்கும் அழியாத பாலமாகும்! 
யார் என்று தெரியாமல், 
நிறம் பார்க்க நினைக்காமல், 
மாற்றார்க்கு உதவும் மனம் இருந்தும், 
அங்கு சென்று நாம் ஆராயவேண்டியது 
மதத்தை அல்ல மனிதத்தை! 
இவ்வுலகில் பல துன்பங்கள் நடக்கின்றன... 
அவையெல்லாம் நமக்கு தென்படுவதில்லை, 
நமக்கு எப்போது அத்துன்பம் வருகிறதோ 
அப்போது தான் அதனை உணருகிறோம். 
அந்நிலையில், நாம் வேறுபாட்டையெல்லாம் 
தவிர்த்து உதவி என்று நிற்கிறோம், 
அவ்வாறு நிற்போர்க்கு உதவவும் நினைக்கிறோம். 
இவ்வெண்ணம் நாம் வாழும் இப்புவியில், 
ஒவ்வொரு நொடியிலும் நம்முடன் இருந்தால் 
மனிதநேயம் என்பது என்றும் மறையாது. 
அத்தகைய மனிதமே உண்மையான காதல் !



                       
                                                                                                     - கிரிசேஷ் குமார்