செவ்வாய், 31 ஜனவரி, 2017

உன்னுடன் ...

மனதை வருடும் காலை பொழுதில் 
வெண்புறாவைப்போல் உன்னைப் பார்த்தேன்  
தூய சந்தனமாய் உன் முகத்தில்
நினைத்துக்கொண்டேன் நான் என்னை   
உன் கண்கள் மறைக்கும் வார்த்தைகளெல்லாம் 
பனித்துளியாக பொழிந்தது எனக்கு  
கோவம் சூழ்ந்து நீ பார்த்தாய் என்னை 
ஆனந்தம் அடைந்தேன் அம்மணித்துளியில் 
சிவந்திருக்கும் உன் அழகில் 
நானும் இருந்தேன் உன்னுடனே !



                                                                           - கிரிசேஷ் குமார்  


வெள்ளி, 27 ஜனவரி, 2017

உறுதி

வெண்மையான புறாவின் கண்களில் 
உயர்ந்திருக்கும் தன்னம்பிக்கையுடன் 
தூய்மையான உண்மையினால் 
வெந்துருகும் மெழுகினைப் போல் 
ஒளிமயமான செங்கதிரால் 
கிழக்கில் உதிக்கும் ஆதவனைப் போன்று 
பரவ விரும்பும் தூய உள்ளம் 
இருப்பின் நின் நிகராவர் எவர்தாமோ !



                                                              - கிரிசேஷ்  குமார் 


புதன், 25 ஜனவரி, 2017

அன்னையே ..

என்னை  அனைத்துத் தழுவிய 
என் அன்னையின் கைகள் 
காற்றடித்து கரைந்துபோயின 
முகம் மலர்ந்து சிரித்துப் பழகினேன் 
அவள் திருமுகத்தை தினமும் நோக்கி 
இன்று மனதினுள் அழுதாலும் 
கண்ணீர் தேங்குகிறது என் முகத்தில் 
கண் முன்னே நின்ற அவளை 
கண் மூடி தேடுகிறேன் இன்று 
என்னை தாலாட்டி வளர்ந்தவள் 
இன்று இல்லை இத்தரணியில்
மாற்றார் விழி முன் தெரியாத என் தாய் 
இருக்கிறாள் என்றும், என்னுள் ,என்னுடன்  !!!


                                                                            - கிரிசேஷ் குமார்      

திங்கள், 23 ஜனவரி, 2017

நாம் !!!

காலம் பதில் சொல்லும் என்று
காத்திருந்த நாம் இன்று
நாம் சொல்லும் பதிலை
காலம் ஏற்று நடக்க செய்தோம்
கற்பனையில் கழித்த முப்பொழுதையும்
தேடிக் கண்டுபிடித்து மாற்றினோம் 
நாம் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து 
கரையில் நின்று கூவினோம் நாம் அன்று 
மாறியது காலம் இன்று
அலை கடலாய் திரண்டு 
முழங்கினோம் வெண்சங்காய் 
நீதி கேட்டு கெஞ்சும் மனமில்லை 
பறை முரசுடன் கூறுவோம் 
மெய் நிகரான நீதியை நாமாகவே  !



                                                                           - கிரிசேஷ் குமார்  



புதன், 18 ஜனவரி, 2017

குரல் கொடுப்போம்

நினைத்ததை முடிக்க முடியும் 
என்ற எண்ணம் நம்மிடம் இருந்துவிட்டால் 
ஒன்று சேர்வோம் கடல் அலையாய் 
போராடுவோம்  கை கோர்த்து
எனக்காக , உனக்காக என்றில்லை 
நமக்காக நாமே சேர்ந்து 
போராடுவோம் !!!
குரல் கொடுத்துக் கொடுத்து 
துவண்டுவிடுவோம் என்ற எண்ணத்தை 
தகர்த்து கண்டெடுப்போம் நம் உரிமையை நமக்காக...
காண இயலாத வரலாற்றைத் தேடி 
வீணடிக்கும் நேரத்தை விட்டு விட்டு 
உருவாக்குவோம் நம் வரலாற்றை இவ்வுலகில் 
பிரச்சனை எதுவாக இருப்பினும் 
தீர்வுக்காக இணைந்திடுவோம் நொடி முடிவில் 
எத்திசை திரும்பினாலும் 
நாம் நிற்போம் உண்மை குரலாக ...!!!


                                                                - கிரிசேஷ் குமார்


சனி, 14 ஜனவரி, 2017

பொங்கலோ பொங்கல்!!!

நம் ஊருக்குச் சென்று 
ஒரு வாரம் இருந்து 
மண் வாசனை கமழும் பானையில் 
பொங்கல் என்ற அன்னமிட்டு 
பொங்கி வரும் வெண்மையில் 
" பொங்கலோப்  பொங்கல் ", 
என கூச்சலிட்டு ...
சுற்றும் முற்றும் கூடி வந்து 
விருந்து படைக்கும் வண்ணத்தோடு 
கதிரவனால் கவலை தீரும் என்ற மறையில்  
இனிக்கரும்பை ருசித்துப் பார்த்து 
காளை , பசுவை வழிபட்டு 
மகிழ்ச்சி அடையும் இதுவே எங்கள் 
தமிழர் திருநாளாம் !!! 



                                               - கிரிசேஷ் குமார்  



வியாழன், 12 ஜனவரி, 2017

வெண்பிறை

முகில் மீது படர்ந்து வந்து 
கதிர் விடைபெறும் இனிய மாலையில்  
குயில் கூவும் ஓசைக் கேட்டு  
தென்றல் தீண்டும் மூங்கில் காற்று 
தேங்கி நிற்கும் சிறு குட்டையில் 
உன் பிறை முகத்தை மறைத்து காட்டி 
என்னை மயங்கி பார்க்க வைக்கும் 
வெண்ணிலவே .......!!!
                                     

                                                                   - கிரிசேஷ் குமார்  

திங்கள், 9 ஜனவரி, 2017

காலத்தின் களம்



பசுமை என்ற ஒன்று 
என் கல்லூரி முழுதும் சூழ்ந்தது 
பரவி நின்ற நிழல் குடைகள் 
பகிர்ந்து உண்ண உதவின 
சிறிய சிறிய மழைத்துளிகள் 
அவற்றை ப்ரமாண்டப் படுத்தின 
ஆனால் ...... இல்லை இன்று அவை 
மாறியது காலம் காற்றில்  
பசுமையான பாலைவனமாய் 
வீசித் திரிந்த தென்றல் காற்று 
வெறுங்கையை விரித்துக் காட்டியது 
வண்ணங்கள்  நிறைந்த மலர்ச்சோலை 
வாடிய முகத்தைக் காட்ட மறுத்தது 
மாறும் இந்த தோற்றம் 
விடியும் ஒரு நாள் பசுமையுடன் 
ஆம் ...... யாருக்கு எப்படி இருந்தாலும்
நான் நண்பனாய் நினைத்த அந்த மரங்களே !!!



                                          - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 6 ஜனவரி, 2017

என் கலை நீயே !




சிவந்திருக்கும் கலை முகம் 
மணித்துளியும் மறையும் தருணம் 
என் மனதில் உதிக்கும் உந்தன் எண்ணம் 
தனியழகான உன்னுடைய மூச்சுக்காற்று 
நான் மலர்ந்திடுவேன் என் மேல் 
பட்டுப் பரவிய உடன் ...!
தெரியவைத்தாய் நான் யார் என்று 
உன் மனதில் ... இருக்கும் 
எண்ணமெல்லாம் நீ தானே என் உலகில் !!!


                                                 - கிரிசேஷ் குமார் 



                                    

ஏற்ற திசை எது ?




காற்றடிக்கும் திசையில் செல்லாது 
நாம் செல்லும் திசையில் காற்றடித்தால் 
அந்த திசையில் நாம் செல்ல தகுதியுண்டு ...
யாருக்காகவும் நாம் என்று இருப்பதை விட 
நமக்காக சிறு கல்லிருந்தாலும் 
நாம் நம் வாழ்க்கையை வாழ உரிமையுண்டு !!!

                                                           


                                                                                - கிரிசேஷ் குமார்   

மலரோ மதியோ !

பார்வையைக் கவரும் பொற்குளத்தில்,
மறை இதழில் பட்டும் படாமல் .........
தனியாக தெரியும் "தன்"(ண்)ணீரைப் போல ,
பார்வை திரும்பும் இடத்திலெல்லாம் 
இருக்கும் என்னை நீ 
பார்த்தும் பார்க்காமல் இருக்கும் 
உன் மலர்க்கண்ணோ என்னை நோக்கி !


                                                           - கிரிசேஷ் குமார்   

கயலாக நீ இருந்தால் ...

 

 

தாமரைக் கண்களுடன் என் கருத்தில் நிற்கும் 

தாரகையே நின் மனம் கமல ,

என்னை நோக்கி உன் விழி அசைய  வேண்டி

நீந்தி வந்து உன்னை அடையும் 

சிறு மீனாகவும் வந்தடைவேன் 

இக்குளத்தில் உள்ள நீர் முழுதும் வற்றினாலும் உனக்காக ! 



                                                                               - கிரிசேஷ் குமார்