ஞாயிறு, 2 டிசம்பர், 2018

மனதின் திகைப்பு


பிறை திரும்பி பார்க்கையில் அடையும் கிறக்கம் 
பிணை கைதியாக்கி நாற்கோண அறையில் அடைத்தது. 
சிறு கயம் கரையில் கண்ட அந்நுதலில் 
கவின் கதைக்க கதை கவியக் கண்டேன். 
என்னமர் தளர்ந்து மதி முழுவதும் நீர
வார்த்தை ஏதும் இல்லாது நவில முயன்றேன். 
விசும்பித் திரியும் சிறு வெளிச்சமதெல்லாம் 
புலம் மறந்து மயங்கிக்கிடந்தன அப்பொழிவின் முன்னே. 
பெயல் பொழிய கார் பல கைகொடுக்க 
மூங்கில் காட்டில் முகில் மேயும் பொழுதில்,   
ரசித்தேன் ஒவ்வொரு அணுக்களையும்
குவியமில்லாத ஒரு காட்சிப் பேழையாக...!




                                                                                             - கிரிசேஷ் குமார்   
  

செவ்வாய், 30 அக்டோபர், 2018

தாயன்பு!

இருண்டு கிடக்கும் உலகம் அனைத்தும் 
கன்னிமைகள் அவை திறக்கும் முன்னே. 
பார்வை தெரியும் முன் கேட்டிடும் செவியில் 
என்னைப்பார்த்த அவளின் அன்புக் கதறல். 
விழிதிறந்து நான் அவளை பார்க்க - விடாமல் 
அழுதது அவள் வலியை உணர்ந்திடத்தானோ?
தன் கைக்குள் அணைத்த அவள் என்னை - முத்தமிட்டாள் 
அவள் குருதி கொண்ட எனது மேனியில்.
என் கையது அவள் முகத்தில் பட்டதும் 
மறக்க முடியாத அவளது வலியோ 
மறதிகொண்டு புன்னகையானது - அவள் 
சதையில் உயிர்கண்ட என்னைக் கண்டு. 


இத்தகைய தாய்மையின் நிகர் வேறேதும் உண்டோ இவ்வுலகில்???






                                                                   - கிரிசேஷ் குமார் 




வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மனதின் ஆசை

கூட்டத்தை தொலைத்த பட்டாம்பூச்சி 
கூடி வாழ வழிதனை தேடியது. 
பூக்கள் குவிந்த தோட்டத்தினுள் சென்று 
பல வண்ணங்களை கண்டு வியந்து நின்றது.  
ஒரு சிவப்பு நிற செம்பருத்தி அங்கு 
தன்னை அழைக்க விரைந்து சென்றது. 

"உன் அழகை உணர்ந்த எந்தன் மனமோ 
  நின் சிறகினைவிட வேகமாக அடிக்கிறது.
  உன்னில் என்னை ஓர் அங்கமாக கொண்டு 

  இருப்பதை அறியாமல் இருக்கும் உனக்கு 
  என் உயிரை தேனாக பரிசளிக்கிறேன் "

என்று அதன் மனதை உரைத்தது அப்பூ.

அத்தருணத்தில் தனக்கு கிடைத்த அன்பினால்
தனிமையில் திரிந்த அந்த பட்டுபூச்சிக்கோ 
தனக்கென ஒரு உயிர் உள்ளதை எண்ணி 
உள்ளம் உருக மகிழ்ச்சியில் மிதந்தது.





                                                                                                 - கிரிசேஷ் குமார் 

 


சனி, 14 ஜூலை, 2018

என்ன பெயர் இதற்கு ?

அன்பெனும் சாபமது அவர் கண்ணில் தெரிந்ததெனக்கு.
கலங்கிய கண்ணீரில் கரைந்தது என்னுள்ளம்.
முதுமையின் முழுமையில் இமைமுடி விழுகையில்
ஒருவேலை உணவிற்க்கு உழைக்கநினைக்கும் உயிரது. 
கால் சிறிது  நீட்டாது ஒரு ஓரத்தில் அமர்ந்து
நரைமுடியில் மறைந்த முகமதில் தெரிய
பசியின் தவிப்பு அவர் இசையதில் புரிய
மீட்டும்  இசையில் தன் பசி  அதனை மறக்க 
ஆசை கொண்ட அவரது முகத்தில் - ஏக்கம்
அவை ஏற்றங்கள் அறியாமல் ஏற துடித்தது .
எட்டு திசையிலும் எட்டாத கண்ணீரை
துடைத்ததும் அந்த இசையின் வலிமைதான்.
இது பசியின் துயரமா? ஏழ்மையின் உயரமா?




                                                                                                                - கிரிசேஷ் குமார்








சனி, 7 ஜூலை, 2018

எது வறுமை ???

காசு பணம் எல்லாம் கொட்டிக்கிடக்கும் 
கணத்த நெஞ்சம் கவலையில் மிதக்கும் 
அனைத்து செல்வமாய் கண்முன்னே தெரியும்
அணைக்க முடியாமல் அன்றாடம் அலையும் 

இது தான் வறுமையா ?

காலை மதியம் இரவு என மூன்று வேலைக்கும் 
ஒருமுறையே உணவாக பழையசோற்றை உண்ணும் 
கழிவறை அளவிலிருக்கும் இடத்தை இருப்பிடமாக கொண்டு 
கண்திறந்து கனவுகாணும் மக்களின் உள்ளம் 

இல்லை இது தான் வறுமையா ?

கேட்டவை எல்லாம் கையில் கிடைக்கும் 
கேட்காதவை கூட கண்முன் அமையும் 
வெற்றிடம் ஒன்று மனதினுள் நிலவும் 
வெறுமையை துடைக்க நாள்தோறும் திரியும் 

இதற்கு பெயர் என்ன ?

மறுநாள் நிச்சயமிலா ஒருநாள் வாழ்வில் 
மனதை ஏமாற்ற கனவுகள் சில காணும் 
தனக்கென்று ஒரு அடையாளத்தை தேடி 
தனக்குள்ளே நொடிவிடாது போராடும் 

இதன் பெயர் தான் வறுமையோ ?

வறுமையின் பொருளை நாடி தினமும் 
வறுமையால் வாடும் வாழ்க்கையை மறக்க 
வரைமுறைக்குள் முடங்கிக்கிடக்கும் 
மனதின் பெயர் என்ன ???

பதில்கள் பல இருந்தாலும் 
கேள்வி அது ஒன்றே ஆகும் 

எது வறுமை ???




                                                                - கிரிசேஷ் குமார் 

வியாழன், 21 ஜூன், 2018

ஓசை

தாய் வயிற்றிலிருந்து வந்த சிசுவதன் 
அழுகுரலில் கேட்கும் முதலோசை. 
கருங்கற்கள் அவை சிந்திச்சிதற 
சிற்பங்களை செதுக்கும் சிலையோசை. 
தன் குஞ்சின் பசியினை தணிக்க - அலைந்துதிரியும் 
காகமது கரையும் அதன் ஏக்கம் ஓசை. 
உலகுயிரை காக்க மேகமவை பொழியும்  
சிறுதுளி மழையிலும் கேட்கும் உயிரின் ஓசை. 
காதலனை எண்ணி கண்ணியவள் சிந்தும் 
கண்ணீரில் கேட்கும் ஆவலோசை. 
கரைசேர துடிக்கும் மீனவனின் துடுப்பில் 
விலகும்நீரில் கேட்பது உறுதியோசை. 
கள்ளம்கபடமில்லாது கண்முன்னே இருக்கும்  
குழந்தை சிரிப்பில் கேட்பது மழலையோசை. 
இவ்வாறு ஓசைகள் பலகோணத்தில் இருந்தாலும் 
இசையின் உயிர்துடிப்பாய் இருப்பது வாழ்வினோசை!





                                                                                                           - கிரிசேஷ் குமார்





சனி, 16 ஜூன், 2018

இன்பம்

கனவில் வரும் வண்ணமெல்லாம்
மனத்துள்ளே வெளிப்படுகின்றன
அதில் மலரும் கதைகளமதுவோ
கண்ணில் வந்து மறைகின்றன
ஏக்கம் கொண்ட எண்ணங்களெல்லாம்
எழிலழகுடன் தெரிகின்றன
அனைத்தையும் நானோ மறந்துகிடக்க
மழை சாரல் மனதில் பொழிகின்றன
மயக்கம் தரும் காலைப்பொழுதோ
கற்பனைக் கனவில் மிதக்கின்றன
கண்ணுலகில் நிறைவேறா ஆசைகள்
கனவுலகில் நித்தம் நடக்கின்றன.






                                                      - கிரிசேஷ் குமார்       

வியாழன், 31 மே, 2018

துன்பத்தை மறைக்கும் தூக்கம்

கண்ணால் கண்ட நிகழ்வுகளை எண்ணி, 
கலங்கிநிற்கும் முகில்திரள் மனமதனை எண்ணி, 
நம் முகத்தில் மலரும் சிறு சிரிப்பை கூட 
விடைக்க மறுக்கும் எண்ணங்களை எண்ணி, 
துவண்டு திரியும் சிதறிய ஏக்கங்களை 
தாங்கிக்கொள்வது என்பது - நம் 
கண்ணில் தேங்கும் கண்ணீரை  துடைத்திடாமல் 
கரையும்வரை பார்த்துக்கொண்டிருப்பது போன்றதாகும்.
ஆனால், எத்தகைய துன்பம் வந்தாலும் 
எந்தளவுக்கு மனமது உடைந்திருந்தாலும் 
சிறிது நேரம் தூங்கிட - கலைந்திடும் 
நீர் சேரா மேகங்களைப் போன்றதாகும். 
நமக்காக நம்முள் இருக்கும் ஒருவன் 
நம் துன்பங்களை களைய இருக்கிறான். 
தூக்கம் தெளிந்து நாம் எழுந்திடும் போது 
நம் துன்பமானது நமக்கு மறந்திருக்கும் அல்லது
நமக்கே தெரியாமல் நமக்குள் மறைந்திருக்கும்.
துன்பத்தில் வந்த கோபமும் - அதனால் 
துடித்து துடித்து ஏங்கிய ஏக்கமும் 
நாம் தூங்கி எழுந்த பிறகு நம்மை விட்டு 
அகன்று செல்லும் அந்த கனவுடனே. 
வலி முற்றிலும் மறையவில்லையெனினும் 
அவ்வலியை மறக்க ஒரு வழி நமக்கு தெரிந்துவிடும். 
இவ்வளவு நன்மை பயக்கும் அத்தூக்கமோ 
அதிகம் வருவது நம் துன்பத்தில் மட்டும் தான்.




                                                                                               - கிரிசேஷ் குமார்    

செவ்வாய், 8 மே, 2018

சிலையழகு!

கருமயிர் நரைக்க கவலைகள்பல இருக்க, 
கண்சிமிட்டாது அவனது கருவிழியோ, 
கண்ணிமைக்கும் கருஞ்சிலையவளை நோக்கி. 
கடமை துயரை நித்தமவன் மறைத்து,
சிறு நளினமும் நகர்ந்திடாது அமைத்து,  
சிலை வடிவை சிறப்புற அமைத்தான். 
சிற்றோன் அவன் தன் வலி கொடுத்து, 
சிலையதனில் உயிர்வலி கண்டான். 
வெண்பனி முகங்களுவ முனைந்தவன் விரைந்து,  
வினையாற்றும் எண்ணத்தை சிலைவிழியில் பார்க்க, 
வியர்வைத்துளி அதுவும் வெண்குருதியாக தெரிய, 
விசைக்காற்றில் மயங்கியவனோ விழிமுழுதும் காதல்கொண்டான்.



                                                                - கிரிசேஷ் குமார்   

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

ஊக்கம்

பனித்துளியை சுமக்கும் இலையில் 
இளவெயிலது பட்டுத் தெறிக்கும். 
இன்னிசையாக கூவும் குயிலின் குரலோ 
மற்றவர்களின் மனதை வருடும். 
மண் நனைந்து வீசும் அந்த வாசம் 
மழைவரும்முன் ஆடும் மயிலுக்கு தெரியும். 
சிறு வார்த்தைகள் பல பின்னிய கதைகள் 
சித்திரம் அமைத்து நகர்வதை கண்டேன், 
கண் முன் தோன்றி மறைவதெல்லாம் 
கனவென நினைத்து அலைந்துதிரிந்தேன். 
அலைந்து அலைந்து ஓய்ந்த கால்கள் 
அமைதி பெற்று நின்றது ஓரிடத்தில். 
நிலைபெற்ற அன்பதனைக் கண்டு 
நீடித்து நிற்க துடித்த உயிர் எனது.




                                                           - கிரிசேஷ் குமார்    

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பிரியா(புரியா)விடை

கலையும் மேகங்கள் ஒன்றாக கூடிட, 
மறையும் கதிரவனும் மதியழகை கூட்டிட, 
கதை பல பேசிய காலங்களெல்லாம் 
ஒரு சிறுகதையாக கண்முன் ஓடிட, 
நம்பிக்கை எனும் சிறுஉறுதியினை 
தன்னம்பிக்கையாக மாறிட வித்திட்ட 
உயிர்கள் சில இவ்வுலகில் இருப்பின் 
அவர்கள் நமது கல்லூரி தந்த- தூய 
நட்பாகவே இருந்திட இயலும். 
எல்லா உணர்வுகளும் ஒன்றுசேர, 
தாம் கல்லூரியில் கழித்த முதல்நாளினை, 
கனவாக கண்டு திளைத்து, திகைத்தும் 
தூக்கமில்லாது கண்ட கனவது  கலைய,
தம் முகத்தை நனைக்கும் கண்ணீரை, 
துடைக்க மனமில்லாமல் மனமுடைந்து, 
சிரிப்பை விளைவித்த கல்லூரியின் கடைசிநாள்!


                                                                                                 - கிரிசேஷ் குமார்


வெள்ளி, 30 மார்ச், 2018

துணிச்சல்

ஆற்றில் பாய்ந்த ஓடமொன்றில், 
ஒன்றுபடாத விரிசல் இருந்தது.  
அவ்விடத்தில் ஒரு மனத்தவிப்பு நிலவியது.
ஆம், ஒரு புறம் இருந்த சிலந்தி, 
அந்த விரிசல் நீரில் மிடைந்த எறும்பை கண்டு,
செய்வதறியாது திகைத்து நின்றது. 
நமக்கு அது சிறு விரிசலே என்றாலும், 
பதற்றம் நிறைந்த அவற்றிற்கு,
இக்கரையில் தெரியும் அக்கரையாகும்.
ஓடிக்கொண்டிருக்கும் ஓடத்தில் நீரானது சூழ, 
மிதக்க இயலாது தத்தளித்த எறும்பினை, 
எமனானவன் தன் பாசக்கயிறு வீசி சிறைபிடிப்பதற்குள் 
போராட்ட உணர்வுடன் அச்சிலந்தி,
வலை வீசி இழுத்தது தன் சக உயிரை காக்க. 
நீர்வலிமையில் நனைந்த வலை அது அறுபட, 
ஓரத்தில் நின்றிருந்த அச்சிலந்தியும் நீரில் விழுந்தது. 
இதை பார்த்த அந்த எறும்பானது, 
தன் உயிரை எண்ணி தளராது, 
சிலந்தியினை தன் மேலேற்றி கரைசேர்த்தது. 
அப்போது வரை அந்த எறும்பிற்கு தெரியவில்லை, 
தான் நினைத்தால் எதையும் செய்ய இயலுமென்று.


எந்த செயலாக இருப்பினும்,
"அதனை செய்வது கடினம்", 
என்று யார் வந்து உரைத்தாலும், 
அதனை செய்ய துணிவதே, 
அச்செயலின் வெற்றியாகும்.


                                                                                                      - கிரிசேஷ் குமார் 

புதன், 14 மார்ச், 2018

மறைக்க(மறுக்க)ப்படும் அடையாளம்!!!

நாள்தோறும் நாம் காண்பவைகளெல்லாம் உண்மையாகவே நாம் காண்பதில்லை. இது ஏன்? ஏனென்றால் நமக்கு இருக்கும் வேலை அப்படி என்ற சாக்கு நம் மனதில் வந்து நிற்கிறது. இவ்வாறு நாம் மறந்து போகும் ஒரு அடையாளத்தை பற்றி பாப்போம். வாழ்க்கை ஓடி ஓடி உழைப்பதற்கு மட்டுமே என்று கருதும் மாந்தர்கள் பலர் ஒற்றுமையோடு வாழும் இடமே குப்பமாகும். இங்கு வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பூர்வீக தொழில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். ஒருவர் கொத்தனாராக இருப்பார், ஒருவர் சாக்கடை சுத்தம் செய்பவராகவும் இருப்பார். இன்னும் சிலர் சுவரொட்டிகளை ஒட்டுவார் , சிலர் கிடைத்த வேலைகளை செய்யவல்லவராக இருப்பர். இவர்களின் பெயர்கள் மட்டுமே ராமசாமி, முனுசாமி, குப்புசாமி என்றிருக்கும். ஆனால், இவர்கள் செய்யும் வேலைகளெல்லாம் ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அந்நாள் முதல் இந்நாள் வரை இவர்கள் நிலை பரிதாபம் தான். நம்மில் பலரும் இவர்கள் வாழும் குப்பத்தை அங்கங்கு கண்டிருப்போம். ஆனால், அவர்களெல்லாம் 'ஏன் இவ்வாறு இருக்கிறார்கள்?', என்று சற்று சிந்தித்ததுண்டா??? இல்லையே , நமக்கு தான் நம் வேலையை பார்க்கவே நேரமில்லையே! அப்படி என செய்துவிட்டோம் நாம்? அவர்களைப்போல் ஒரு நாள் நம் வாழ்வில் உழைத்ததுண்டா? இல்லை, அப்படியே உழைத்துவிட்டால் அடுத்த ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுகிறது நமக்கு. ஆனால், அதே உழைப்பை தினமும் நமக்காக செய்யும் அவர்களை நாம் சற்றே ஏளனமாக கருதி மறந்துவிடுகிறோம். அவர்களெல்லாம் நகரம் முழுதும் பரவி வாழ்ந்திடலாமே, ஏன் அவர்கள் அவ்வாறில்லாது ஒன்றாக குப்பை என்று நாம் கருதும் குப்பத்தில் வாழ்கிறார்கள்? ஏனெனில், அவர்களுக்கு தெரியும் ஒருவருக்கு மற்றவருடைய உதவி தேவை என்று. இவ்வாறு வாழும் அவர்களிடையே ஒற்றுமை எனும் உறுதி இருக்கும். நாம் துறுநாற்றம் என்று மூக்கை மூடும் இடத்தில் தான் அவர்கள் உணவினை உண்பார்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இதனினும் கொடுமை என்ன என்று தெரியுமா? இவையெல்லாம் தம் கண்களுக்கு தெரியக்கூடாது என்று உயர்தர வர்கம் நினைத்ததால் தான் நாம் குப்பம் என்ற ஒன்றை தீண்டாமல் இருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் தம் வேலைகளெல்லாம் நிறைவேற ஆட்கள் தேவை ஆனால், அவர்கள் வாழும் குப்பமென்பது வேடிக்கைபொருளாகிவிட்டது. ஒருவருக்கு தம் பெயர் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறதோ அதேபோல் தான் குப்பம் என்பது அங்கு வாழும் அவ்வுழைப்பாளிகளின் அடையாளமாகும். இந்த குப்பத்தின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்ற கேள்வி நம்முள் பலருக்கு இந்நேரம் எழுந்திருக்கும். அவ்வாறு எழவில்லையென்றால் அந்த சிலர் ஊருடன் ஒத்து வாழ தகுதியற்றவராவார். சரி இந்த நிலை மாறுவது எப்படி? எனக்கு தோன்றிய சிறிய எண்ணம், நாம் ஒன்றும் பெரிதாக செய்யவேண்டாம். குப்பங்களையும் மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டால் போதும். அங்கு வாழும் மக்களுக்கும் சற்றே மரியாதை குடுத்து பழகினால் அவர்கள் வாழ்க்கை தரமும் நமது வாழ்கை முறையும் பல மடங்கு மேம்படும். எனவே, குப்பம் என்பது ஒரு அடையாளம் அதனை அழியாமல் காப்பதாலே அம்மக்கள் நமக்கு செய்யும் உதவிகளுக்கு நாம் செய்யும் சிறு கைமாறாக விளங்கும்.






                                                                                              - கிரிசேஷ்  குமார்   

புதன், 7 மார்ச், 2018

அடைய துடிக்கும் உயிர்...

உயிர்த்தெழ நினைத்தேன் நான்! 
நடுநாகரீகனாக இருந்த ஒருவனுள், 
ஒற்றை படல வார்த்தைகளை, 
தன் வாழ்வடியில் வாக்கியமாக்கி... 
செதுக்க பல வழிகள் இருந்தும்,
செங்கதிர் உதிக்கும் திசையில், 
சிலை முகமது பளிச்சிடுமாறு, 
தன் சிரத்தை அவனும் தாழ்த்தி, 
தாழ்ந்திடாத வாழ்க்கை நெறிகள்பல, 
தளர்ந்திடாமல் நம்முன் எறிந்திட, 
உருவாக்கிய அந்நாடுநாகரீகனாய், 
உயிர்த்தெழ நினைத்தேன் நான்!




                                                                                             - கிரிசேஷ் குமார்   

வியாழன், 1 மார்ச், 2018

மனம் உரைக்கும் அறிவுரை ...

நம் பேச்சில் புரியும் வார்த்தைகளெல்லாம், 
நம்மை பின்தொடர்ந்து வருவது இல்லை. 
கவலையில் தேங்கும் எண்ணங்களெல்லாம், 
கரைய காத்திருக்கும் காலப்போக்கில். 
அறிய துடிக்கும் மௌனங்கள் அதனில் 
மறைந்திருந்து மலரும் மொழிகள்.
தடைபட்ட நம் உறவுகளெதையும்,  
தனிமை தடுத்து நிறுத்துவதில்லை. 
அலைந்து திரிந்து உழைப்பதினாலே 
ஊதியம் உடலுக்கு கிடைப்பதுமில்லை. 
சற்று நேரம் இளைப்பதினாலே, 
சாதனை அது தவறுவதில்லை. 





                                                                                         - கிரிசேஷ் குமார் 

புதன், 14 பிப்ரவரி, 2018

காகிதக்கப்பல்

கரை சேரா மீனவனவன்,
கடல் நீரின் உப்பாக மிதக்க,
மனமுடைந்த அவன் மனைவியோ,
உப்பிட்ட கணவனுக்காக,
உப்பினை மட்டுமே உணவாக உன்ன,
இவையனைத்தையும் நினைத்த நொடியிலே,
கரைந்தேன் என் கண் (கடல்) நீரில் உப்பாக....!!!




இப்படிக்கு அவன் கரைசேர துடித்து கண்ணீரில் கரையும் நான்.

பிணைப்பு

சொற்கள் பல கைகோர்த்த
கதை அதனில் உனைத்தேடி
உன் கருவிழியில் எனைப்பார்த்து
அன்பை நாடி நான் அலைய
அனைத்தும் அன்பாய் நீ தெரிந்தாய்
நீரொட்டா எண்ணையில் படர்ந்த
தீப திரியாக நான் இருந்தேன்
என்னை நிமிர்த்தி ஒளியேற்றினாய் நீ  
அச்சமதனில் மிதந்த என்னை - மீட்டெடுத்து 
கரைசேர்த்தாய் பாசப் படகில்.




                                                                                       - கிரிசேஷ் குமார் 

வியாழன், 8 பிப்ரவரி, 2018

மழை அவள் இனிமை !

சிற்றன்பின் செவியில் - ஒரு 
சிறுதுளி மழை வரையில், 
சிந்தனை கலைந்த மனமோ, 
பாலின் வண்ணம் தெரிய, 
பழச்சுவை அதனை அறிய, 
என் சிறு நாவின் - பல 
நரம்புகள் நடனமாடின. 
முகத்தில் விழுந்த மழையோ, 
சிரிப்பை தரித்த துளியோ, 
மரத்தில் மலர்ந்த மலரும், 
மனதில் தெரிந்த முகமும், 
வெண்முகில்கள் நடுவில் - கண்ட 
அந்நிலவின் ஒளியில் கண்டேன். 
நினைவில் மறந்த எனையும், 
நிழலில் மறைந்த மதியோ, 
கனவில் கரைந்த - எந்தன் 
கன்னத்தில் முத்தமிட்டாள்!



                                                                                                   - கிரிசேஷ் குமார் 

புதன், 31 ஜனவரி, 2018

ம‌னம் மட்டும் இருந்தால்...

சிறையென தெரிந்தும் கூட,
சினத்தை தவிர்த்து இருந்திடவே...
இனிமை பல மறந்த மனமோ,
மந்திர வார்த்தைக்கு கட்டுப்பட்டது.
கனிகள் அவை கனிந்தும் கூட,
நுனிநாவில் சுவை இழந்ததன்றோ...
செவி கேட்கும் வார்த்தைகளெல்லாம்,
சிதறிக்கிடக்கும் சின்னங்களின் கோர்வையே.
இளைப்பாறும் உடலும் கூட,
ஊந்துளைக்கும் மனம் மட்டும் இருந்தால்!



                                                                                   - கிரிசேஷ் குமார்  

வியாழன், 18 ஜனவரி, 2018

புதையல்

தினமும் நோக்கும் கடிகாரம் கூட, 
சிறிது நேரம் கண்மூடி விழிக்கும். 
கிழவி அவள் பேசும் கதைகள்கூட, 
முற்று பெற்று முடிவை நாடும். 
நிம்மதியை தேடி ஓடும் நாம்மட்டும், 
அதனை நம்பியே நாட்களைக் கழிக்கிறோம். 
அலைந்துதிரிந்து நம்பிக்கையை கண்டெடுத்தோம். 
ஆனால், நிம்மதியை நாம் உணரமுடியவில்லை. 
"ஏன் ?", என்று யோசித்துப் பார்க்கையில், 
அனுபவிக்கும் காலமது நகர்ந்து சென்றது. 
மறுபிறவி எடுத்து வந்த நிம்மதியோ, 
நாம் இன்று விரும்பும் பணமாக மாறியது!   



                                                                                                   - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 5 ஜனவரி, 2018

எனக்காக...

செம்மை படைக்கும் வெப்பமதனில், 
கதகதக்க காட்டுக் குளிரும் சூழ, 
நிலவொளி வெளிச்சமது எங்கும் வீசிட, 
ஆற்றுநீரானைத்தும் மறுவுயிருடன் பாய, 
கண்மூடும் கதிர்மறைப் பொழுதில், 
அலைந்தோடும் மனம்தான் எனது. 
இமை மூடா எந்தன் கண் முன், 
எரியும் நெருப்பும் நடனமாடக் கண்டேன். 
கதை கூற முனைந்து நின்று, 
எம்முகத்தை ஒளிரவைத்தது அவ்விருளில், 
கண்முன் தெரிந்ததை பார்த்த நானோ, 
கண்ணுள் இருப்பதை அறிய முயன்றேன். 
நான் பார்த்த யாவும் ஓர் கதையாகயிருக்க, 
காண மறந்த கதைகள் பல - கண்டேன் 
கண் முன்தெரிந்த அந்நடனத்தில். 
இவையனைத்தையும் உணர்ந்த எனக்கு, 
' எனக்காக' என்னும் சொல்லின் பொருளை, 
கண்ணுள் காட்டியது சுடர்விடும் நெருப்பு!





                                                                                              - கிரிசேஷ் குமார்