ஞாயிறு, 31 டிசம்பர், 2017

இனம் தெரியாத உணர்வு!

பனிபடர்ந்த நுனிப்புல்லானது வெட்கம் சூழ புன்னகைத்த அந்த காலைப்பொழுதில் குளிரால் குறுகினான் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அகிலன். மயிர்சிலிர்க்க அவன் கனவு கலைந்து பொறுமையாக இருக்க ஒட்டிய தன் கண்களை திறக்க முயன்றான். அரைமூடிய கண்களுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்த அவனுக்கு " எட்டு மணி ஆச்சுடா நாயே! ", என்று அவனது அக்காளின் குரல் ஒலிக்க கல்லூரிக்குச் செல்லவேண்டும் என்ற நினைப்பு உயர்ந்தது அவன் மனதில். மூடிய கண்களை பட்டென்று திறக்க, சக்கரம் காட்டாத அவன் கால்கள் ஓடத்தொடங்கின. தன் தினசரி வேலைகளையெல்லாம் அரைமணிநேரத்தில் அரக்கப்பரக்க முடித்து புறப்பட்டான் கல்லூரிக்கு. அவன் தாய் சிவகாமி " டேய் சோம்பேறி காலேல செஞ்சிவெச்சத கொட்டிக்கிட்டு கெளம்பு ", என்று கடிந்தாள். அகிலனும் அவசரத்தில் சிந்திச்சிதறி சாப்பிட்டுவிட்டு ஓடினான். சாலை கடக்க பொறுமையில்லாமல் நின்றிருந்தான் அவன். தன் அருகில் ஒரு இளம்பெண்ணும், கண் தெரியாத ஒரு முதியவரும் நின்றிருந்தனர். எதிர்பக்கத்தில் பேருந்து வருவதை கண்ட அவன் சாலையை கடக்க முற்பட்டான். வேகமாக ஒரு இருசக்கர வண்டியொன்று தன்னருகில் வருவதை கவனிக்காமல் அவன் சாலையைக்கடக்க தொடங்கினான். இதனை பார்த்த அந்த பெண் அவன் பின் விரைந்து அவன் கையைப்பிடித்து இழுத்தாள். அதனால் எதிர்பாராமல் பின்னே நகர்ந்த அவன் தன் கண்ணிமைக்கையில் அவன் கைக்கடிகாரம் அந்த வண்டியின் மீது ஒரு நொடி உராய்ந்தது. ஓரமாக வந்த இருவரும் பதற்றத்துடன் நின்றனர். சிலிர்த்துப்போன அவன் , புன்னகைத்த அவள் முகத்தைக்கண்டு நிதானமடைந்தான். நன்றிகள் பல கூறினான் அவளுக்கு. அப்போது அங்கிருந்த பார்வையற்ற முதியவர் " பாத்துப்போடா தம்பி ", என கூறினார். அதைக்கேட்டவுடன் அந்த பெண் தன்னைமறந்து சிரிக்கத்தொடங்கினாள். பின் " நா வர்றேன் ", என்று கூறிவிட்டு திரும்பினாள் அவள். இன்பத்தில் இமைமூடிய அவன் கேட்ட முதல் சத்தம் " அம்மா !", என்று அந்த பெண் அலற, சட்டென்று முன்னே நோக்கினான். கண்ணாடி வளையல் சில்லுச்சில்லாக சிதற, தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தாள். அங்கிருந்தவர்களெல்லாம் கூட்டம் கூட, அதில் சிலர் " படுபாவி அவ மேல ஏத்திட்டு எப்படி நிக்காம போறன் பாரு", என்று அவனை சாடினர். இன்னும் சிலர் " அய்யோ பாவம்! ", என்று கூறி அவளை நோக்கி மரங்களைப்போல் நின்றிருந்தனர். இவற்றையெல்லாம் கண்ட அகிலன், மனம் பதபதைத்து அவளிடம் சென்றான். அவள் கன்னத்தைத் தட்டி அவளை எழுப்ப முயன்றான். அவளை தன் தோல் மேல் சாய்ந்து அமர வைத்துக் "கண்ண தொரந்து பாருங்க! உங்களுக்கு ஒன்னும் ஆகாது! கண்ண தொரங்க", என்று கூறினான். அருகில் இருந்த ஒருவர் "ஆம்புலன்ஸை கூப்டுங்க! ", என்று கூற இன்னொருவர் "தம்பி அவங்கள தூக்கு என் வண்டில ஏத்திட்டு ஆஸ்பத்திரிக்கு போய்டலாம் ", என்று கருணையுடன் கூறினார். அகிலனும் உடனடியாக மற்றவர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். அந்தப் பெண்ணுக்கு சிறிது நினைவிருந்தது. சுற்றி இரத்த கரையாக இருந்தன.அகிலனுக்கே தெறியாமல் அவன் கண்கள் கலங்க தொடங்கின. ஒருவழியாக மருத்துவமனையை அடைந்தனர். அந்தப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க அகிலன் அங்கிருந்த மருத்துவர்களை நாடினான். அவர்கள் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க, அகிலன் பதில் இல்லாமல் கலங்கிய கண்களுடன் தவித்தான். மருத்துவர் ஒருவர் "பரவாயில்லை,அந்தப் பொண்ண சீக்கிரம் கூட்டிட்டு வாங்க!", என்று கூறினார். கூட்டிச் செல்லும்போது அந்தப் பெண் கையசைத்து அகிலனை அழைத்தாள். அவனிடம் அவள் ஏதோ முனங்கினாள். அகிலன்தனக்கு கேட்கவில்லை என்று இன்னும் அருகில் சென்றான். அப்போது அவள், "தாமரை" என்று கூறிவிட்டு இரத்ததில் சிவக்க அவன் கண்ணத்தில் ஒரு முத்தமிட்டு மயங்கினாள். அகிலன் செய்வதறியாது உரைந்து நின்றான். மருத்துவர்கள் தாமரையை சிகிச்சை அரைக்குக் கூட்டிச் சென்றனர். தேம்பித் தேம்பி அழத்தொடங்கிய அவனை உடன்வந்தனர் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தனர். ஆறு மணிநேரத்திற்கு பிறகு,கண்ணீரெல்லாம் காய்ந்து வாடிய முகத்துடன் நடைபிணம் போல் இருந்த அகிலனிடம், சிகிச்சை அரையில் இருந்து வந்த மருத்துவர் "பயப்படத் தேவையில்லை,அவங்க பொழச்சிட்டாங்க போய் பாருங்க...", என்று மொழிந்தார். அக்கணமே அரைக்குள் அவளிடம் விரைந்தான் அகிலன்.தன் வலியையும் பொறுத்துக்கொண்டு அவனைப்பார்த்து "ஒன்றுமில்லை பயப்படாதே", என்பதுபோல் சற்று சிரித்தாள். பின் அவனை அருகில் கூப்பிட்டு "உன் பேர் என்ன ?" என்று அவள் பாதி மயக்கத்தில் கேட்ட அவன் கண்ணில் கண்ணீருடன் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து "அகிலன்", என்று மொழிந்தான். 





                                                                   - கிரிசேஷ் குமார் 


வியாழன், 21 டிசம்பர், 2017

சிரிப்பு

மந்திர தந்திரம் தெரியாமல் இருப்பினும், 
தந்திர மந்திரம் ஒன்றை நன்கறிவோம். 
வாழ்வென்பது புரியாமல் இருந்தாலும், 
இருப்பது எதற்கென்று தெரியாமல் திரிந்தாலும், 
சரித்திரம் படிக்க வழியில்லை என்றாலும், 
சரித்திரம் அமைக்க வழி ஒன்று கண்டாலும், 
சிரிப்பென்பதே விடையாக அமையும். 
பிறரை நமக்கு பிடித்திருந்தாலும்,
நம்மை பிறர்க்கு பிடித்திருந்தாலும், 
சிலர்மேல் நமக்கு கோபமிருந்தாலும், 
நம் இன்பத்தை மற்றவருடன் பகிரவும், 
நம் துன்பத்தை அவர்களிடமிருந்து மறைக்கவும்,
நமது முகத்தையே அவர்களுக்கு காட்டும் முகமூடியாக 
நாம் உபயோகிக்கும் அந்த தந்திர மந்திரமே சிரிப்பு!



                                                                                                     - கிரிசேஷ் குமார் 

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பாலம்

இடம்பெயர தவித்த மனதை, 
தடம் அமைத்து கூட்டிச்செல்லும். 
தவிப்பென்பதை மறைக்கச் செய்து, 
இதயம் துடித்த கணத்திலெல்லாம்,
கல்லென நின்ற மனத்துள்ளும், 
ஈரம் பாய நித்தம் நினைத்து,
நம்பிக்கையெனும் பாலம் அமைக்க, 
முயற்சித்தது எந்தன் உள்ளம். 
கல்லை கரைக்க வழியில்லதெனினும், 
அதனை நனைக்க வழி தெரிந்தது. 
ஒற்றுமை என்ற வார்த்தை ஒன்று, 
ஒருங்கிணைக்கும் பாலமே நம்பிக்கையாகும். 
சிதறி திரிந்த மனமும் முற்றும்  
பாலம் அதன்மேல் நித்தம் சுற்றும்.



                                                                                - கிரிசேஷ் குமார்    

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கதிர் "அவன் " காதல்

மதி மீது கதிரவன் கொண்ட காதல் 
காவிய கதையினும் பழமையாகும். 
அக்கதைகள் பல மாய்ந்தாலும் 
கதிர் "அவன் " காதல் மட்டும் மாய்வதில்லை. 
ஒருவன் தன்னை தாழ்த்திக்கொண்டு 
தன் காதலை நேசிப்பதுப்போல் 
காலை முழுதும் பறந்து விரிந்த தம் 
கதிர்களை - மலர்ந்த மாலையில் 
சுருக்கிக்கொண்டு அவ்விருளில் 
நிலவவளின் ஒளியழகினை பார்த்து 
மயங்கத் துடித்தான்...
தன்னைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் 
காதல்கண்ணோடு அவனவளை 
நேசிக்கத்தொடங்கியபோது இவ்வுலகானது 
அந்த காதல் காவியத்தை பார்க்கப் பிறந்தது.





                                                                                            - கிரிசேஷ் குமார்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அன்பு

கதிரொளியில் பட்டுதிக்கும் தாமரை போல, 
மனக்கலக்கத்தால் சேர்ந்த கண்ணீரை, 
துடைத்தெடுக்கும் தூய அன்பாகும் அது.
கவலைகள் பல அது களையெடுக்க, 
கரையில்லாமல் நம்மிடமது கரையொதுங்க. 
மௌனம் மொழியும் வார்த்தைகளெல்லாம், 
கண்ணடித்து உணர்த்திடும் அது நமக்கு. 
அன்பால் மலரும் சிரிப்புகள் பல இருந்தும், 
அதனால் உருவெடுக்கும் கோபமும், 
அதற்கு காரணமாகும் பிரிவுகளும், 
தத்தம் வலிமைகளையெல்லாம் ஒருங்கிணைக்கும். 
சிறு சிறு சண்டைகளும் விழுதுகளே, 
வீரியமுடன் நிற்கும் அம்மரத்தின் 
விதையாக மலரும் பேரன்பினால்.
'மன்னிப்பு' என்ற ஒரு சிறு வார்த்தை, 
மக்களின் பிரிதலும் புரிதலும் 
அவர்களின் வாழ்வின் இருதுருவங்களாம்
என்பதை நமக்கு நன்குணர்த்தும். 
நம்பிக்கையுடன் கூடிய எந்த பாசமும், 
அன்பென்னும் தாயின் அடிமைகளாகும்!




                                                                                               - கிரிசேஷ் குமார்   

வியாழன், 30 நவம்பர், 2017

இனிமை

கருமுகிலும் நெஞ்சை வருடி, 
கதிர் மறைய ஆடை சூழ்ந்து, 
நிலமுழுதும் நிதானம் நிறைந்து, 
மனமெல்லாம் மகிழ்ச்சி பரவி, 
பரபரப்பான பொழுதை மாற்றி, 
சட்டென்று  கண்விழிக்க - ஆனந்த 
கண்ணீரும் என்மேல் பட்டுத்தெறிக்க,
காதலெனும் திரைகடலால் சூழ, 
அதிலிருந்து தப்பிக்க சிறிதும் நினைக்காமல்,
நான் அதில் முழுமையாக மூழ்க,
இனிமையான அந்த மழையில், 
என் மனதை நனைக்கக் காத்திருந்தேன் 
காதல் பேச பார்த்திருந்தேன்...!



                                                                                 - கிரிசேஷ் குமார் 

திங்கள், 27 நவம்பர், 2017

விழிப்பு

உணர்வென்று நினைக்கும் பொழுதில்
கனவாக கலையும் சுற்றத்தின் நடுவில்
தனித்து நின்ற ஒரு மரக்கிளையின் ஏக்கம்... 
தன்னை கண்டுகொள்ளாத உறவுகளை எண்ணி, 
தன்னுடன் இருக்கும் உயிரையெல்லாம் மறந்ததன்று. 
தம் விழிக்குத் தெரியாமல் தமக்கு
உதவிய அவ்வனைவரையும் அது
சிறு துரும்பாகவும் மதிக்காமல் இருந்தது. 
ஆனால்,  கவலையில் வாடிய அது
தன் வாழ்வின் ஒவ்வொருநாளையும்
வாழ்ந்ததாக தம்மையே ஏமாற்றிக்கொண்டு, 
வாழாதே கழித்தது மடமையுடன். 
திடிரென்று ஒருநாள் அது மடிந்தது
அதன்பிறகு மேலிருந்து பார்த்தபொழுது, 
தனது கண்முன்னே தெரிந்ததெல்லாம்
அதனிடம் வாழ்ந்த பறவைகளும், 
அதன் உணவாக இருந்துவந்த பூச்சிகளும் அதை விட்டுச் செல்ல மனமில்லாமல் சென்ற
அந்த காட்சி மட்டுமே....
இதனைக்கண்ட பிறகு துடித்தது அதன் உள்ளம்.!
இத்தனை நாட்கள் வீணடித்ததை எண்ணி...
வருத்தம் கொண்டு பயனில்லை என்பதனை
அறியாமல் அங்கும் உயிர்நீங்க ஏங்கியது மரக்கிளை...!
வாழும்போது நம் பார்வைக்கு தெரிவதைமட்டும்
பார்த்து மயங்கி ஏமார்ந்திடாது
நமக்காக வாழவும் சிலர் இருப்பார்கள் என்ற
சிந்தனையை மனதில் வைத்து நாட்களை கழித்தால்
அதுவே நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமாகும்!!!



                                             - கிரிசேஷ் குமார்   

வியாழன், 23 நவம்பர், 2017

பதிவுகள் பல...

பக்கங்கள் பல இருப்பினும், 
பார்வையை ஈர்க்கும் இதழ் ஒன்றாகவே இருக்கும். 
அதில் சில வரிகள் சிரிக்கச் செய்யும், 
இன்னும் சில வரிகள் சிந்திக்கவும் செய்யும். 
இது போன்ற பக்கங்கள் சில இருக்கலாம் 
நாம் படிக்கும் அந்த புத்தகத்தில். 
ஒரு சிலவை சோகத்தில் ஆழ்த்தும், 
சில பக்கங்கள் நம்மை வழிநடத்த உதவும். 
காதல் கொள்ளும் பக்கங்கள் சில, 
கோபம் தனிக்கும் பக்கங்கள் பிற. 
பக்கங்கள் எத்தனை இருப்பினும், 
இடம்பெறும் வார்த்தைகள் என்பது 
புத்தகத்தின் உயிரை வளர்க்கும். 
படிக்கும் வாசகர் யவராக இருப்பினும், 
படித்து முடித்தவுடன் எண்ணுவது... 
முற்றுப்பெறாத புள்ளிகளாக திகழும் 
தத்தம் வாழ்க்கை பதிவுகளே...! 




                                                                                          - கிரிசேஷ் குமார்    
                                                                                       

ஞாயிறு, 19 நவம்பர், 2017

தோழி

திரிந்த திசை தெரியாமல் இருந்த என்னை, 
திரை திறந்து விழிக்கச் செய்தவள் அவள். 
செய்வதறியாது திகைத்தபோது, 
இன்செய்தால் நன்மை தருமென மொழிந்தாள். 
மலர்மேல் படர்ந்த வெண்பனிபோல, 
உணர்வெடுத்து ஊட்டினாள் என் தோழி. 
சிறுவண்டுகூட தேன் தேடி சுற்றியபோது, 
எனக்கென மட்டும் எனை சுற்றி நீ வந்தாய். 
கண்மூடி நம்புவேன் உன்னை என்றும்,  
உன் முடிவு என் முடிவாக அமைந்தாலும்கூட. 
கோபம் கொள்வேன் உன்னிடம் நான், 
உரிமையுடன் எனக்காக என்றும் நீ இருப்பாயென்று. 
சிலிர்த்து போன எந்தன் இதயமோ, 
துள்ளித் துடித்தது என்வாழ்வில் நீ நுழைந்தபோது. 
என்னை புரிந்து கொண்ட நீ எனக்கு, 
மறு அன்னையாக என் மனதில் பதிந்தவளாவாய்!



                                                                                                         - கிரிசேஷ் குமார்  

புதன், 15 நவம்பர், 2017

உயிரில் உணர்ந்த உறவு

என் முகம் மலர தினமும் துடிக்கும், 
தீர்வறியாது திரிந்த என்னை, 
தெளிவாக்கிய உள்ளம் அது தான். 
சிரிப்பென்பது மறந்த போது, 
மடமையாற்று சிரிக்க செய்து, 
சிறந்ததை தேடிய எனக்கு, 
சீரான வழியையும் காட்டி, 
கைகோர்த்து நடந்து வந்து, 
கடமை என்று நினைத்துவிடாது,
என்னையும் கருத்தில் கொண்டு,  
முழு அன்புடன்  நேசித்த மனமது. 
கண்ணீர் கடலில் தவித்த என்னை, 
காகிதக் கப்பலில் ஏற்றிக்கொண்டு, 
கரை சேர கூட்டிச் சென்றது, 
என் உயிரில் கலந்த என் நட்பு !




                                                                                   - கிரிசேஷ் குமார்  


நினைப்பதும் நடப்பதும்

நினைத்ததெல்லாம் நினைவாகுமா ?
நினைவுகளெல்லாம் நிஜமாகுமோ ?
இதனின் ஒரு எடுத்துக்காட்டாக என்
கல்லூரியின் கனவை பிறர் கூற நான்
என் செவியை இனிக்க விரும்பினேன்.

ஒரு நாள் இட்லி மாவு வாங்கி வர சென்றேன் ஒரு கடைக்கு.
இரு ஒரு கிலோவுக்கு மாவு மடிக்க சொன்னேன்.
அவர் ஏதோ என்னிடம் பல நாட்கள் பழகியது போல்
" என்னடா ஒரு திணிசாக கேட்கிற ?
நீ எந்த காலேஜ் படிக்கிற ? ", என்று
அவர் என்னிடம் உரிமையுடன் கேட்டார் . நானும் பொதுவாக
இல்லாமல் "CEG ல தான் படிக்கிறேன் " , என்று
தைரியமாக மறுமொழிந்தேன் . அவர் ஏதோ
நான் சொல்லகூடாதது சொன்னதுப் போல்
என்னை ஒரு விதமாக பார்த்து,
" அப்படி ஒரு காலேஜ் இருக்கா ? ", என்று கேட்க
அந்நொடியே என் தைரியம் அனைத்தும்
சில்லு சில்லாக நொறுங்க உணர்ந்தேன் .
பின் அதிர்ச்சியில் உறைந்த நான் சற்று
பயத்துடன் " அண்ணா யுனிவர்சிட்டி  ",
என்றேன் ஓரிரண்டு மூச்சில் .
"அப்பா ! நீ அங்கயா படிக்கிற?
உன்னப் போய் தப்பா  நெனச்சிட்டேனே!",
என்று அவர் கூற என் மனதில் ஒரு
எண்ணம் உதித்தது உடனடியாக.
" நா அப்படி ஒண்ணுமே செய்யலையே !",
என்றேன் என் மனதிடம் மெதுவாக.
"ஏன் அப்படி  சொல்றீங்க ?",என்று கேட்டேன்
அவரிடம் , மனதில் ஒரு சலனுத்துடன் .
அவர் " அட என்னப்பா நீயே இப்படி கேட்ட !
உன் கல்லூரிய பத்தி நா சொல்லித்தான்
தெரியனுமா ? உன் கல்லூரியில் சேர்ந்தாலே
வேல நிச்சயம் கெடச்சிடுமே!
படிக்கும் போதே பட்டம் வாங்குற மூளை ,
இங்க சேர்ந்தாலே வாழ்க்கை மாறிவிடும்,
நாலு வருஷம்  கழிச்சி உன்ன
கையில பிடிக்க  முடியுமா ???
இத்தனைக்கும் நீ படிக்கிறது அரசு
கல்லூரியாச்சே காச பத்தி கவலையா உனக்கு !",
என்று ஒரு பூரித்த முகத்துடன் கூறினார் .
அந்நேரத்தில் எனக்கு தோன்றிய எண்ணம் ஒன்றே !
வைகைப் புயல் வடிவேலு கூறுவது போல்
" இந்த உலகம் இன்னுமா நம்மல நம்புது ?",
என்று நகைத்தேன் உள்ளத்தினுள் .
ஆனால் அவர் கற்பனையில் உண்மையான ஒன்று
அரசு கல்லூரியில் சேர்ந்ததால் கட்டணம் பற்றி
பெரிதாக கவலை பட தேவையில்லை .
ஆனால், அப்போது வியந்தேன் நம் சமூகத்திற்கு
இவ்வளவு கற்பனைத்திறன் உள்ளதா என்று !
அதற்குள் அவர் மாவை கையில் கொடுத்துவிட்டார் .
நானும் வீட்டிற்கு திரும்ப முனைந்தேன் .
செல்லும் வழியில் யோசித்துப்பார்த்தேன் .
"நம்மில் சிலருக்கு பல்கலைக்கழகத்திற்கும்
கல்லூரிக்கும் வித்யாசம் தெரியவில்லையே !
மேலும் என் பல்கலையில் நான் படிக்கும்
கல்லூரியை சேர்த்து CEG, ACT, SAP என
மூன்று கல்லூரிகளுடன் கற்பக வனமாக திகழ்கிறது .
இதனை நம்மில் பலரும் அறிவாரோ ?
மேலும் பதினைந்திற்கும் மேற்பட்ட
பட்ட படிப்புகளுடன் மையம் கொண்டுள்ளது
இவர்களுக்கு தெரியாதோ ?", " ஏதோ
இங்கு சேர்ந்தவுடன் உயர்வதுபோல்
நினைக்கிறார்கள் , படாத பாடு பட்டு
படிக்கும் நமது நிலை நாம் மட்டுமே அறிந்தது !".
சிலர் சொல்வதை போல்  " சச்சினா இருந்தாலும்
சிக்ஸ் அடிச்சா தான் மரியாதை !".
இக்கருத்து எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று
அவர்கள் அறியவேண்டும்.  ஆனால்,
பிற கல்லூரிகளை போல்  எல்லா நேரமும்
பாடம் நடத்த மாட்டார்கள் , மாணவர்களின்
மனதை புரிந்து பல இடைவெளிகளில்
சில பாடங்கள் நடக்கும் . ஆனால் , இடைவெளிகள்
பல நாம் நமதாக்கினால் பலரை விட பல
மடங்கு படிக்கலாம் இந்த உலகில் .
பாட்டு, நடனம் , விளையாட்டு ஆகியவை
எல்லாம் மாணவர்களே கற்பிப்பர் ,
கற்றும் கொள்வர் என்பது இங்குள்ள தனிச்சிறப்பு .
மனம் மகிழுமாறு சில ஆச்சரியங்களுடன் ,
பல ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டே இருக்கும் .
கதிர் உதிர்க்கும் ஒளியினில் பல
வெயில் இங்கு விளையாத அளவிற்கு
அடர்ந்த காடாகவே தெரியும் மேலிருந்துப் பார்த்தால்.
அக்காட்டுக்குள் வாழும் நாங்கள் அனைவரும்
நாகரீகமடைந்த காட்டு வாசிகளே !
" கற்பிக்கும் கடலாகும் இது ,
கற்றுக்கொண்டே கரை சேரலாம் ", என்ற
எண்ணத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து
கதவைத் தட்டினேன் .கதவைத் திறந்த
அப்பா ," வாடா தண்டசோறு , ஏன் இவளோ
நேரம் ?", என்று கதைக்க சிதறிய பல
உணர்வுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தேன் .



                                                                                                       - கிரிசேஷ் குமார் 

ஒரு மதில் கூறிய கதை...

என்மேல் அமர்ந்தான் ஒருவன் அன்று, 
தனிமையில் இருந்த சிற்றோனைக்கண்டு, 
கண்ணீர்த்துளிகள் உலகை ரசிக்க, 
கவலைமழையில் அவன்  ரசனை மறக்க, 
தன்னுடன் கதைக்க உள்ளம் ஏங்க, 
ஏமாற்றம் தந்த மௌனம் எனது. 
நிலவொளியின் வெளிச்சம் கூட, 
வீசவில்லை அவன் மனதின் நடுவில். 
என்மேல் படர்ந்த முள் செடியும்கூட, 
செவி சாய்ந்தன அவன் கண்ணீர்பட்டு. 
பேசமுடியா அசைந்த அவன் இதழும், 
இதயம் கதைக்க என் கண்முன் கண்டேன். 
அதை பார்த்த எந்தன் மனமோ, 
அவன் கண்ணீரைத்துடைத்து ஆறுதலளிக்க,
உயிர்பெற வேண்டி துடித்தது என்னுள்ளே!



                                                                                         - கிரிசேஷ் குமார் 

ஞாயிறு, 12 நவம்பர், 2017

உணர்வுகள்...

நம் உணர்வுகள் வேறுபட்டாலும், 
மனம் அவற்றை ஒருங்கிணைக்கும். 
மகிழ்ச்சியுடன் சிரிப்பவர்களைவிட,
பலர் இவ்வுலகில் தினந்தோறும்,  
துன்பத்திலும் புன்னகைத்து, 
பிறரை சிரிக்கவைக்கவும், 
தம்மவர்களுக்காக போலி எனும் 
முகத்திற்குப் பின்னே அழுதும்,
வருந்தியும் வாடிக்கொண்டிருப்பர்.  
இது 'தவறு' என்று கூறவே முடியாது. 
'மாற்றாரிடம் பகிர்வதில்லை' என்றும் 
அவர்களை எளிதில் குறைகூறவும் முடியாது. 
பிறர் துன்பத்தில் சிரிப்பவர்களை விட, 
பிறர் தம் துன்பத்தால் வருந்தாமல் இருக்க, 
நாள்தோறும் சிரித்து மறைப்பவர்கள், 
பல மடங்கு சிறந்தவராவார். 
ஒருவன் ஒரு விஷயத்தை உன்னிடம் 
கூறாது மறுக்கிறான்  என்று  
சிந்திப்பது நியாயம் தான் - அதற்காக 
அவன் மேல் கோபம் கொள்வதையெல்லாம்  
நான் தவறாக பார்க்கவில்லை. 
ஆனால், இவற்றையெல்லாம் செய்யும்முன் 
ஒரு நிமிடமாவது ஒதுக்கி, 
"அவன் ஏன் என்னிடம் கூறவில்லை ?",
என்று சிறிது யோசித்தாலோ அல்லது, 
அவன் மனநிலையில் சற்று நீங்கள் 
இருந்து சிந்தித்தாலோ உங்களுக்கே 
அந்த விடை கிடைத்துவிடும். 
அதன் பிறகு அவன் செய்தது தவறாயின், 
உங்கள் கோபம் நியாயமானது. 
அதிலும் கோபம் என்பது வெளிப்படையாக 
ஒருவருடன் காரணத்துடன் இருக்கவேண்டும், 
முதலில் அது அவற்றுக்கு தெரிந்திருக்கவேண்டும். 
ஆம், இப்புவியில் எல்லாவற்றிற்கும், 
ஒவ்வொரு வழிமுறை இருக்கின்றது. 
அதன் வழி செயல்படுவதே சிறந்தது. 
வெட்கம் என்பதும் இயல்பானதாகும். 
ஏன் சில வெட்கத்தில் அழகும், 
அதன் உடைமையும் வெளிப்படும். 
இது ஒருவர் மீதுள்ள பற்றுதல் காரணமாக,  
எல்லோருக்கும் வருவது இயல்பு. 
இதனால் அவரிடம் பயமும், 
பிணைந்துகொண்டே இருக்கும். 
அவை தவறில்லை -ஆனால் 
அந்த பயத்தை வளரவிடுவது தவறாகும். 
இவ்வாறு நான் கூறிய சிலவற்றைப்போல், 
இன்னும் பல பல உணர்வுகளை, 
நம் மனம் ஒருங்கிணைத்து சேர்த்துவைக்கும். 
"உணர்வுகள் பல விதம், 
ஒவ்வொன்றும் ஒரு விதம்",
இக்கூற்று எல்லோருக்கும் சரியாக பொருந்தும்.








                                                                                                         - கிரிசேஷ் குமார்

சனி, 4 நவம்பர், 2017

மனிதம்!

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும், 
ஒரு விதத்தில் நமக்கு சொந்தமாவார்கள். 
"அப்படி இல்லை", என்று சிலர் 
நம்முடன் முரண்படுவதும் கூடும். 
அதனால், உண்மை என்றும் மறையாது. 
காதல் என்ற ஒன்று -இன்று 
தனித்திரு ஆண் பெண்ணுக்குரியதையிற்று. 
இன்று காதல் என்ற கூற்றை கேட்டவுடன், 
சிலர் போற்றுவதும் உண்டு, 
சிலர் தூற்றுவதும் உண்டு. 
அது நாம் மாற்றிய சமூக நிலைப்பாடாகும். 
ஆனால், காதல் என்பது 
நிறங்களைக்கடந்து, மாந்தரை மறந்து 
மதம், இனம், மொழி என பல 
வேறுபாடுகளையும் களைந்து, 
அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, 
காலத்திற்கும் அழியாத பாலமாகும்! 
யார் என்று தெரியாமல், 
நிறம் பார்க்க நினைக்காமல், 
மாற்றார்க்கு உதவும் மனம் இருந்தும், 
அங்கு சென்று நாம் ஆராயவேண்டியது 
மதத்தை அல்ல மனிதத்தை! 
இவ்வுலகில் பல துன்பங்கள் நடக்கின்றன... 
அவையெல்லாம் நமக்கு தென்படுவதில்லை, 
நமக்கு எப்போது அத்துன்பம் வருகிறதோ 
அப்போது தான் அதனை உணருகிறோம். 
அந்நிலையில், நாம் வேறுபாட்டையெல்லாம் 
தவிர்த்து உதவி என்று நிற்கிறோம், 
அவ்வாறு நிற்போர்க்கு உதவவும் நினைக்கிறோம். 
இவ்வெண்ணம் நாம் வாழும் இப்புவியில், 
ஒவ்வொரு நொடியிலும் நம்முடன் இருந்தால் 
மனிதநேயம் என்பது என்றும் மறையாது. 
அத்தகைய மனிதமே உண்மையான காதல் !



                       
                                                                                                     - கிரிசேஷ் குமார் 

வியாழன், 26 அக்டோபர், 2017

யார் நீ ?

மாற்றார் கூறும் சொற்களெல்லாம், 
மனம் தேடும் வார்த்தைகள் அல்ல. 
பிறர்க்கு தோன்றும் எண்ணங்களெல்லாம், 
சொற்களாக வடிவம்பெற்று வருகின்றன. 
சிலர் கூறும் கருத்துகளினால், 
அவ்வாரே உன் அடையாளம் அமைவதில்லை. 
முகம் பல இருக்கும் இவ்வுலகில், 
மனம் சில பேசும் நொடிப்பொழுதில். 
இவையனைத்தையும் கட்டுப்படுத்தி, 
கரைத்து செல்லும் நேரமது. 
அதன் சுழலில் சுற்றி வந்த எண்ணமே, 
திசை தேடி திரியும் பார்வைகளால். 
உன் அடையாளத்தை - உனக்கு 
பிறர் கூறி தெரிவதை விட, 
நீயே உன்னை தேடலாம் உன்னுள்ளே.
அது உண்மையா என்றும் ஆராயலாம், 
ஆனால், அவ்வாறு தேடும் பொழுதில், 
மாயமுகத்தில் தொலைந்துவிடக் கூடாது. 
ஆகவே, "நீ யார் ?", என்ற முடிவை 
உன்னைப் பார்ப்பவரோ அல்லது 
உன்னுடன் நெருங்கி பழகியவரோ, 
ஏன் உன் பெற்றோர்கூட கணித்திட முடியாது. 
உன் மனதில் உன்னை பற்றி, 
நீ நினைக்கும் எண்ணமே உருவெடுத்து, 
உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாகும்!




                                                                                              - கிரிசேஷ் குமார்    

செவ்வாய், 17 அக்டோபர், 2017

நின்று ரசித்த தருணம்

இமைத்து நின்றேன் ஒரு மாலைப்பொழுதில், 
மதி மயங்கி கிடந்த என்னையும் அவள் அன்று.
தம்மரையிதலைப் பார்க்கச் செய்தாள், 
சிறு சிறு எண்ணங்கள் எனக்குள்ளே - சேர்த்து 
சிற்பமாக செதுக்கச் செய்தாள் அவளங்கே. 
முடியா தருணமாக அது மாறிட வேண்டினேன், 
நான் நாடிடாத கடவுளிடம் கூட! 
அம்முகத்தைப் பார்த்து நின்ற என்னை, 
விழியிமையில் தூக்கி வீசினாள்,
வளைந்து செல்லும் சிறு கயலாக. 
வீழ்ந்தபின்னும் தயங்காது எழுந்தேன், 
அவள் முகத்தை கடையிலும் ரசிப்பதற்காக. 
சில காலங்கள் முன் இழந்த என் பலத்தை, 
மறுமலர்ச்சியடைய கண்டேன் அவள் முகத்தில்! 
இங்கு பலம் என்ற முடியா.... கூற்று, 
என் முழுநம்பிக்கையாம் என் தாயின் முகமே! 
விழித்தேன் பலநாள் மயக்கம் தெளிந்து, 
ரசித்தேன் அவளை என் கண்ணில் -உள்ள 
கருவிழி நோக்கும் பார்வையாக !!!





                                                                                              - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 13 அக்டோபர், 2017

சன்னல் ஓரம்

யோசனைகள் பல இருந்தன ...
நடத்திக்கொண்டிருக்கும் பாடமும் புரியாமல், 
நடத்தும் ஆசிரியரையும் காணாமல்,  
வகுப்பறை ஓரமாய் ஒன்றியிருக்கும், 
சன்னலுடன் ஓர் உரையாடல். 
சற்றும் கலங்காது உற்றுநோக்கினேன். 
ஒன்பது கம்பிகளுடன் இருந்த ஒற்றைச்சன்னலை... 
சிறிது நேரத்தில் சட்டென்று ஒரு குரல், 
"நீ இருக்கும் இவ்வகுப்பில், 
பலரையும் நான் பார்த்ததுண்டு. 
ஒவ்வொரு மாணவனிற்கும் ஒரு கட்டத்தில், 
தத்தம் வாழ்வை மாற்றும் ஏணியாக, 
யான் அமைந்தேன்! அணைத்தேன் !
விருப்பமிருந்தால் என்னை நீயும் 
ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தி, 
உயரம் பல காணலாம் உன் வாழ்க்கையில்! ",
அது அந்த சன்னலின் மொழியென உணர்ந்தேன். 
பலரும் அதனைப் பார்த்திருப்பார்கள், 
நானும் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 
அதன் பின் தெரிந்த அழகினை உற்று. 
ஆம் அதன் அகத்தின் அழகு! 
என் மனம் மறுமொழிந்தது அதற்கு, 
" நான் யோசிக்க பல இருந்தும், 
உன்னை ஏன் நான் காணத்துடித்தேன்?
இக்கதையெழுத நீ கூறினாயோ அல்லது 
உன் அழகில் மயங்கிய என் 
எண்ணம் எழுத நினைத்ததோ !
மாற்றாரும் பார்க்கும் உன்னை - நான் 
மறுகோணத்தில் உணர்ந்தேன் உண்மையாக !",
புரிந்து கொண்டேன் ஓர் சிறு கோணத்தில் உன்னை. 
"ஒவ்வொரு வெற்றியிலும் நின்று ரசிக்கும், 
பல தோல்விகளில் உடனிருக்கும் உறுதியாக, 
உன் ஊக்கத்தை பார்த்து நான் வியந்தேன்! ".
சட்டென்று விழித்தேன் குறுந்தூக்கத்திலிருந்து, 
பாடத்தை முடித்துச் சென்ற ஆசிரியரையும் 
கவனிக்காது நான் - வைத்த கண் வாங்காமல் 
அந்த சன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 
அதன் வழியே பின்புறம் தெரிந்த மரக்கிளை ஒன்று, 
அசைந்து என்  எண்ணத்தைக் கலைக்கும் வரையில்!    







                                                                        - கிரிசேஷ் குமார்   

வியாழன், 5 அக்டோபர், 2017

மனம் செல்லும் திசை

தனிமை என்று நான் நினைத்த ஒன்று,
கற்றுக்கொடுத்தது அதன் மெய்ப்பொருளை.
பிறர் என்னை சூழ்ந்திருக்க - உணரவில்லை
அவர்களை என் மனதில் துளிகூட
"ஏன்?" என்று சிந்திக்க தொடங்கினேன்.
நாம் மாற்றாரை எவ்வாறு நினைத்துக்கொண்டாலும்,
அது நமக்குள்ளே தான் சுற்றித் திரியும்.
ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களுக்குள்,
புகுத்திப் பார்த்தால் விளைவுகள் என்றும்
ஓர் திசையையே நாடிடாது...
ஒருவனை நீ உன் உயிர் நண்பனாக கருதி,
அவனுக்கென நீ உன் நேரத்தை ஒதுக்கலாம்,
உன் மனதில் அவனுக்கென்று தனியிடத்தையும்,
கொடுத்து உன் மனதையும் பகிரலாம்.
ஆனால், அவன் உன்னை அவ்வாறே
நினைத்துக்கொண்டிருப்பான் என்று நம்பியிருக்கக்கூடாது.
உன் மனம் ஒருவனை நாடுவதுபோல்,
அவன் மனமும் அவ்வாறே செல்லும்.
அதில், அவன் நாடிய உள்ளம் நீ என்றால்,
நீ என்றும் மகிழ்வுடன் இருப்பாய்.
அதே, வேறு யாரோ என்று தெரிந்தால்,
உடைந்துவிடும் உன் உள்ளம் ஊசிநூலாக...
ஆதலால், சிலவற்றை அலசாது இருக்கலாம்,
இங்கு நம் பார்வை மங்குவதில் தவறில்லை. 
உன் உணர்வை புரிந்துகொண்ட ஒருவருக்காக, 
உன் உயிரையும் கொடுத்து உதவிடலாம்.
நம் மனதை பிறருக்காக நாடவிடாமல், 
நமக்காக முதலில் செயல்படச்செய்தால், 
நம் எண்ணம் என்றும் நம்முடனே இருக்கும் !







                                                                                                   - கிரிசேஷ் குமார்   

சனி, 30 செப்டம்பர், 2017

எதிர்பார்ப்பு !

ஏக்கமே ஏங்கும் அளவிற்கு,
எதிர்திசையில் எறிந்த கல்லாய்,
எனை மீறி மனதில் படிந்த எண்ணம் ஒன்று.
எதிர்பார்ப்புகள் ஏராளம்- ஆனால்
அதனை எட்டி பிடிப்பது தான் கடினம்.
ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பு "மீசை முளைக்காதா?",
என்று இல்லாத மீசையை முறுக்குவது.
மீசை முறுக்கும் அவன் தகப்பனின் எதிர்பார்ப்பு
தன் தாய் மடியில் கவலை மறந்து
மணிநேரமாவது நிம்மதியாக தூங்கிட.
வயதிற்கு வந்த பெண்ணின் எதிர்பார்ப்பு
பார்க்கும் கண்களெல்லாம் அவளை நோக்கிட.
அதே வயது இளைஞனின் எதிர்பார்ப்பு
அந்த 'அவள்' அவனை பார்க்கமாட்டாளா என்று.
நம்மில் சிலர் ஏங்குவது - தனிமையின்
சுகத்தினை நாமும் பெறவேண்டுமென்று.
இவ்வுலகில் பலர் ஏங்குவது - இருள்
நீக்கும் ஒளியாக ஒருவராவது தமக்காக
தம் வாழ்வில் நுழைவாரோ என்று.
ஒரு தோழனின் எதிர்பார்ப்பு  - தன் நட்பு
கடையளவிலும் தன்னுடனே நீங்காதிருக்க.
ஒரு மகளின் ஏக்கம் தன் தந்தையின் நிம்மதியாகும்.
ஒரு மகனின் ஏக்கம் தன் தாயின் அரவணைப்பாகும்.
இவ்வாறு ஏக்கம் , எதிர்பார்ப்பு என பல உள்ளன.
அவை அவ்வாறே நடந்தால் நல்லது.
ஆனால், அவையனைத்தும் நடக்கும் என்று
நம்பி எதிர்பார்ப்பது மடமையாகுமோ?
விடை தேட விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.
நம் எதிர்பார்ப்பு நம்முடன் இருக்கும் வரை
ஏக்கம் என்ற ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும்.
ஆனால், அது வெளி சென்று நடக்கவில்லையெனில்,
நினைத்த நிகழ்வெல்லாம் நிழலாக மறையும்!




                                                                                                  - கிரிசேஷ் குமார்      

திங்கள், 25 செப்டம்பர், 2017

கனவின் ஊக்கம்

கனவாக கலைந்ததே பெண்ணே !
கவலைகளெல்லாம் கனவாக கலைந்ததே பெண்ணே !
உன் விழி சிமிட்டும் தருணத்திலெல்லாம்,
வியர் மூச்சும் நிற்பதைக் கண்டேன்.
நீ பார்வையில் பேசிய வார்த்தைகளெல்லாம்,
வளையிட்டு பிடித்தது என்னை அக்கணமே,
எனது உயிரின் முழு மூச்சாக நீ தெரிந்தாய்...
என்ன வீசினாய் என் விழி முன்னே ?
மறைந்து கிடந்த என் மனதை,
தேடித் கொடுத்தாய் நீ அன்றே.
தொலைத்த இடத்தில் பார்த்திருந்தால்,
உன் முகத்தை அங்கே மறந்திருப்பேனோ ?
சுமை தாங்கி பார்க்கும் உன்னை, 
சளைக்காமல் ஒவ்வொரு நாளும், 
சிதறாத இமை எனது இமைக்காமல், 
கவலைகள் பலவிருப்பதை மறைத்து.  
வினை எல்லாம் வேகமாக என்னை, 
விட்டுச் சென்றது விரும்பியபடி.
நரகத்திலும் நான் இருப்பேன்,
உன்னுடனே நகர்ந்து சென்றால்.
கனவாக கலைந்ததே பெண்ணே !
கடல் முழுதும் தெரிந்ததே முன்னே !






                                                                                                  - கிரிசேஷ் குமார்  

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பிச்சைக்காரர்

சாலை ஓரத்தில் நின்ற ஒருவர்,
சதை தெரியுமளவில் உடை கிழிந்து,
சிகைத் தோற்றத்தில் கைகளை ஏந்தி,
நடபதறியாது மயங்கி நின்றும்,
கண்ணோரத்தில் உள்ள கண்ணீர் கூட,
கசிந்த இடம் தெரியாது  காய்ந்திருக்க,
முகத்தில் உள்ள ஏக்கம் குறையாது,
மனதில் உள்ள வருத்தம் முடியாது,
குரல் உயர்த்த முடியாத நிலையில்,
"அம்மா ! அய்யா !", என்று அவர்
கூச்சலிட்ட அந்நொடியிலேயே நொறுங்கினேன்!

தூய அன்பினால் மட்டுமே முடியுமோ ???
ஒரு காலத்தில் வந்தோருக்கெல்லாம்
வயிறு நிறைய அன்னமிட்ட கையது.
இன்று ஒரு பொழுது உணவுக்கு
துடிக்கும் தன் வயிற்றிற்காக,
மனம் வராமல் இருந்தும்,
பிறரிடம் கையேந்தும் நிலையில் அவர்...
தூக்கி வளர்த்த பிள்ளைகளெல்லாம்,
பொத்தி பொத்தி வளர்த்த தந்தையின்,
இருப்பை ஏற்க முடியாமல்,
அவர் கூறிய கருத்துக்களைக்கூட,
கேட்க நேரமில்லாத அவர்கள்,
வளர்த்த பாசத்தையும் மறந்து,
வீதியில் இடமளித்தனர் விறுவிறுப்பாக...
அவர் சொத்தையும் எடுத்துக்கொண்டு,
அன்பையும் பறித்துக்கொண்டு - தகப்பனிடம்
சோகத்தை மட்டும் விட்டுச் சென்றனர் .
சொத்தாக ... அவர் சேர்த்த சொத்தாக...
தம் குழந்தைகளை உயிராக வளர்த்தவர்
வீதியில் நின்றிருக்க - அவர் நினைவு கூட
இல்லாமல் இருக்கும் அவர் பெற்றெடுத்த
பிள்ளைகள் தமக்கென வாழமுற்பட்டனர்.
இவர்களில் யார் பிச்சைக்காரர் ???
தூக்கி வளர்த்த தந்தையா ????
இல்லை தூக்கி எறிந்த பிள்ளைகளா ???
இதனை யோசித்த என் கண்களில்,
அவர் சிந்த நினைத்த கண்ணீர் மட்டுமே கசிந்தது!




                                                                      - கிரிசேஷ் குமார்







சனி, 9 செப்டம்பர், 2017

பேனா முனை

முனை அறிய ஒரு முனையில், 
பட்டையாக தீட்ட உதவி செய்து, 
எண்ணங்களை எழுத்தாக மாற்றி, 
கலந்த பல உணர்வோடு ஊட்டி, 
என்னை நான் இவ்வுலகிற்கு காட்ட, 
என்னுள் தோன்றிய சில கருத்துக்களை, 
கதைக்களமாக்கி புரியவைக்கும், 
புரியாத புதிர் என்று நான் என்னும், 
என் கையின் ஓர் அங்கமாக, 
மெதுவாக நகர்த்தும் நின் விரலை, 
நிற்காது பாயும் துன்பங்கள் பல, 
துடைத்தெடுக்கும் கருவியாக நீ, 
என்னுள் ஒன்றாய் , ஓவியமாய்...
மறைந்திருந்து எனக்கோர் பெயராக, 
நீல நிற குருதியுடன் என், 
மன வலிமைகளையும் பல மெருகேற்றி, 
என் கையை நீ பிடித்து, 
வளைந்துக் கொடுத்தாய் நீ எனக்கு, 
வல்லமை வகுத்தது உன் எழுத்து, 
தண்ணீரை தாங்கும் வெண்முகிலைப்போல, 
சிலரில் ஒருவனாய் என்னையும் மதித்து, 
வல்லினமாக என்னிடம் நீ வந்தடைந்தாய். 
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து, 
எனக்காக உழைக்கும் எனது, 
பேனா முனை நோக்கி நான் வியந்தேன் !





                                                                                  - கிரிசேஷ் குமார் 

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

அவள்

சதை கோர்த்த செங்குருதியில், 
சிலை வடிக்கும் சிற்பி அவள். 
நிறை ததும்பா ஆழ்கிணற்றில், 
நீர் வார்க்கும் செல்ல மகள். 
முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில்,  
மதி குனிந்தது அவள் முகம் கண்டு. 
புள்ளி மானென பார்த்தேன் அவளை, 
பதுங்கிப் பாயும் புலியின் முன்னே. 
பயந்து ஓடும் அதன் மனதினைப்போல், 
பதறியது என் உள்ளம்- அவள் 
கண் சிமிட்டி அந்நொடியில். 
பேச பயந்தேன் நான் முதன்முதலில், 
பிணைப்பை உணர்ந்தேன் பழகிய நொடியில். 
என் மனதை புரிந்த அவள் உணர்வை, 
என்றும் மதிப்பேன் நான் மரியாதையுடன் ! 






                                                                                          - கிரிசேஷ் குமார்

புதன், 30 ஆகஸ்ட், 2017

எதிரொலி

எதிர் கண்ட எண்ணமெல்லாம், 
எதிரொலியாய் வந்ததெனக்கு, 
வாய் பேசா வார்த்தைகள் கூட, 
வடக்கிலிருந்து வந்தொலிக்க, 
வீணடிக்கும் சொல் பல இருந்தும், 
வருந்த வைத்தது இச்சொல் என்னுள். 
நான் பேசும் வார்த்தைகள் யாவும், 
ஒரு முறையோடு மடிந்துவீழ்ந்தன. 
அகல் பேசிய வார்த்தைகள் யாவும், 
பகல் முழுதும் பிணையக் கேட்டேன். 
எனது எதிரொலியை சமாளித்தாலும், 
எதிர்கொள்ளும் ஒலிகள் பல, 
சட்டென்று சாய்ந்தன என் மனதை. 
சிறுக சிறுக நான் பேசிய போதும், 
பெறுகிக் கேட்டது எந்தன் செவியில். 
ஆனாலும் என் மனம் முடியவில்லை... 
"ஒரு முகம் மடிந்த போதும், 
  மறுமுகத்தில் உன்னை பார் ", என்று 
பல ஒலியினில் ஓர் ஒலி கூறியது, 
அறிவொளியாக என்னை பார்த்து!




                                                                                          - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

அன்பின் ஆதரவு

கலங்கி தவிக்கும் விழிவழியே, 
கவலை தொலைக்க எண்ணம் ஏங்கும், 
நொறுங்கி கிடந்த மனம் துகள்களாய், 
ஒன்று சேர்க்க விளையும் ஏக்கத்துடன், 
நினைத்துப்பார்த்த கற்பனை உருவம்! 
கண் கசக்கி நிற்கும் என் முன்னே, 
உயிர் நீட்டிப்பிடிக்கும் நுனிப்புல்லினில், 
கருமேகம் கடந்து விழும் மழைத்துளியாய், 
விட்டுச் சென்ற முகங்கள் இருந்தும், 
முழு நேரமும் என்னை நினைத்தாய். 
முடிந்ததை நினைத்து அழுத என்னை, 
அமைதியாய் முடிந்தவரை சிரிக்கச்செய்தாய். 
அன்பின் உருவமான அது எனது, 
ஆம் என்றும் எனதாக இருக்க விரும்பும் நான். 
அதன் முகத்தில் பார்த்தேன் நான், 
என் அன்னையின் அன்பினை,
பிரியாது எந்நாளும் மாறாது நினைத்தாலும்.
அழகான நட்போ அன்பான காதலோ ?
இதனை ஆய்வு செய்ய மனம் இல்லை எனக்கு, 
தனிமையில் தொலைத்த என்னை, 
கண்டெடுத்து கொடுத்த அதனை, 
தொலைக்க மறுக்கிறேன் என்றும் என் வாழ்வில்!





                                                                                                - கிரிசேஷ் குமார்  

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கதை கொண்ட படமது ...

வண்ணங்கள் பல கலந்திருக்கும், 
வர்ணனைகள் சில மறைந்திருக்கும், 
இவை பேசிய சிறுகதைகள், 
கண்டவுடன் ஈர்க்கும் படமல்ல அது. 
கற்பனையுடன் காட்சி தந்து, 
கனவில் கலையாது நிமிர்ந்து நின்று, 
என்னிடம் ஏதோ வினவிய படமது! 
வண்ணங்கள் பூசும் அழகுடன் இருந்தும், 
வணிக நோக்கம் எதுவும் இல்லாமல், 
கசந்த உண்மையை காட்டிய முகத்தில், 
கரை படித்தவர் எவரோ எவரோ...?
கடற்கரை மணலில் செதுக்கிய- கலைமதியான  
சிற்பங்கள் அதனை கேட்கவில்லை. 
அங்கிருந்த கண்ணகி சிலைக்கும், 
காந்தி சிலைக்கும் அது தெரியவில்லை. 
கேட்டது என்னிடத்தில் அந்த சோகம்நிறைந்த,
கசக்கி எறியப்பட்ட அந்த காகித புகைப்படம். 
பதில் சொல்ல முடியாது திகைத்தேன், 
அதன் அழகை உணர்ந்து உற்று நோக்கியபடி! 




                                                                                   - கிரிசேஷ் குமார்   

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மனம்தானே... மாறிவிடும்!

சிந்தனைகள் பல உண்டு இவ்வுலகில், 
அவற்றில் சில கண்டேன் எம்மனதில்.
என் கண்ணில் தெரிந்த உலகமொன்று, 
நான் கனவு கண்டது மற்றொன்று. 
கிடைத்தும் கிடைக்காமல் இருக்கும், 
இருப்பது மறைந்துபோய் கிடக்கும். 
சிறுவயதில் அழுதேன் சிரிப்பதற்காக, 
இன்று நான் சிரிக்கிறேன் மனம்விட்டு அழுவதற்காக...!
 சிறிய உணர்வுகளை சிறைபிடித்தேன்,  
சிதறிய கவலைகளை நான் உணர்ந்தேன்.  

அன்பினை காட்டினர் எனக்காக... 
அரவணைத்துக் கொண்டனர் மனதார... 
பல இரவில் கண்ணீர் வடித்தேன் -ஆனந்தமாக 
இவ்வுலகில் எனக்கென்று இருக்கும் சிலரையெண்ணி! 
காலம் மாறியதை நானோ மறந்தேன். 
காணும்போதெல்லாம் மாறாதிருக்க,
கரையை காக்கும் கல் அல்ல அது. 
மனித மனம் தானே அதுகூட, 
மாற்றம் கண்டது ஒரு மாலையில்,
ஏற்றுக்கொள்ள மறுத்தது என் மனது. 
துள்ளிச் செல்லும் மானினைப் போல, 
துடித்து எழுந்திட நான் நினைத்தேன். 
முடியுமா என்று தெரியவில்லை, 
முடியும் வரை முயற்சிப்பேன் சளைத்திடாமல்!!!




                                                                                               - கிரிசேஷ் குமார்  

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சிறகுகள்

சிறகுகள் வேண்டும் எனக்கு, 
சட்டென்று பறந்துவிடுவேன், 
சோகத்தையும் மறந்துவிடுவேன்.
பொறாமைக்கொண்டேன் அப்பறவையைக்கண்டு, 
பறந்து செல்லும் பலநேரம், 
குறையாத உற்சாகத்துடன் நித்தம். 
தானாகப் பறக்கும் அதனைப்போல், 
தனியாக நகர முயல்கிறேன் நான். 
தடையற்று நீட்டும் அச்சிறகினில், 
தன்னம்பிக்கை தெரிகிறது அவ்வழியிலே. 
என்னை மதியா சுற்றத்தில், 
நிற்கவேண்டிய கட்டாயத்தில் தவித்திருந்தேன், 
என் செய்வதென்றறியாமல் நான். 
என்னை நான் தொலைத்தேன் அன்று, 
என் மனதை நான் மறந்தபொழுது. 
தெரியவில்லை  அன்றெனக்கு, 
அதற்கும் உயிர் உள்ளதென்று. 
அறியாத சிறுவனாய் நான், 
மயங்கினேன் என் முன் தெரிந்த 
அனைத்தினிற்க்கும் பயந்து சென்று. 
பறந்து வந்த பறவை அது, 
கற்றுத்தந்தது என் தேவையினை. 
இவற்றை நான் பள்ளியிலும் பயிலவில்லை, 
கல்லூரியிலும் கிடைக்கவில்லை. 
ஏன், என்னை சூழ்ந்ததே இருக்கும், 
எனது நண்பர்களும் கூறிடவில்லை. 
அன்று தான் உணர்ந்தேன் நான்... 
தனிமையின் இனிமையினை! 
அன்றெனக்கு சிறகுகள் முளைத்திருந்தால், 
பயந்திருக்க மாட்டேன் -நான் 
என்னை மறந்திருக்க மாட்டேன். 
அப்பறவைக்குத் தெரிய வாய்ப்பில்லை, 
என் மனமறிந்த துன்பத்தினை.. 
மடிந்து மறுபிறப்பில் நான் பிறந்தால், 
அப்பறவைப்போல் நானும் இருக்க விளைகிறேன், 
சிறகுகளுடன் நினைத்ததும் பறந்து செல்ல...!




                                                                                                  - கிரிசேஷ் குமார்  



திங்கள், 31 ஜூலை, 2017

காற்றும் நட்பே !

காற்றும் நட்பும் ஒன்றென்பேன். 
காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது, 
நட்பில்லையெனில் உயிர் ஏதும் கிடையாது! 
கடைமூச்சுக்கூட காற்றினைக் காதலிக்கும்... 
கதை பேசிய கனவுகள் எல்லாம், 
தூய நட்பிற்கு உயிர் கொடுக்கும். 
மனதை கொள்ளை கொள்ளும் பூங்காற்றைப்போல், 
மதியை வென்றுகாட்டும் எம் நட்பு. 
காற்றினில் கலந்திருக்கும் துன்பத்தை, 
துடைத்து எடுத்து தோள்கொடுக்கும், 
துகில் மறையா நட்பெனது. 
சொல்லாத பல நன்றிகளால்,  
பிணைந்துகொண்டோம் ஒவ்வொருவராய். 
சூழ்ச்சி நிறைந்த இவ்வுலகில், 
அடிபட்டு நின்றோம் ஒருநாளில், 
துன்பத்தினில் வடித்தேன் ஆனந்தக்கண்ணீரை... 
பிரச்சனை பல தீர்த்த என் நட்பினைக்கண்டு. 
பிரிந்து செல்லும் முகில் அல்ல நாங்கள், 
சிறு சண்டை வந்ததும் பிரிவதற்கு! 
பலநாட்கள் பேசாது இருந்தால் கூட, 
மனதில் உள்ள அன்பென்பது தேயாது. 
தனிமையில் தவித்திருந்த போது,  
அனைத்துமாய் நின்றவள் அவளே! 
ஆதரவற்று துவண்டிருந்த போது,  
அரவணைத்துப் பேசியவன் அவனே! 
பால் வேறுபடாது பழகும் இன்பம், 
பெற்ற என் நட்பானது திளைத்து நிற்கும், 
காலங்களைக் கடந்த காற்றாக ....!



                                                                                - கிரிசேஷ் குமார்      

வியாழன், 27 ஜூலை, 2017

மீன்கள்

கண் மூடா கனவு காணும், 
திறந்த வாய் மூடித் திறக்கும், 
வண்ணம் நிறை உடலிற்கும், 
ஒளிந்துகொண்டு எட்டிப்பார்க்கும், 
கண்சிமிட்டி என்னை ஈர்க்கும், 
அமைதி என்னும் அன்பைப்பரப்பும், 
அணியாத நகைகளையும் தேடிக்கொடுக்கும், 
ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும், 
கரையோரம் கூடியிருக்கும் இவற்றைக்கண்டால், 
மீனாக மாறிவிடும் என் மனம் கூட !



                                                                                  - கிரிசேஷ் குமார்    

ஞாயிறு, 23 ஜூலை, 2017

மனமே மருந்து

கனவென்ற ஒன்றில் நான் வாழ்ந்து வந்தேன், 
வருவதும் போவதும் யாதென்று அறியாமல். 
கசப்பான ஒரு வாழ்வினை வேறு வழியின்றி நான், 
ஏற்று நடந்தது கூட தெரியாமல்... 
எண்ணமெல்லாம் கலங்கி நிற்கும், 
சிறு குட்டையாக தோன்றியது நான் பார்க்கும்போது! 
பெருகிக்கிடக்கும் ஆனந்தமும் தொலைவினில் கண்டேன், 
சின்ன சின்ன பிரச்சனைகளும் பெருகி வரப்பார்த்தேன். 
சிறு துரும்பிலும்  தனிமையை உணர்ந்தேன், 
சிதறிப்போன வாழ்க்கை என்று நினைத்த அதனை, 
நான் கண் விழித்துப் பார்க்குமாறு, 
பக்குவமாக பேசிப் பேசி - பிரிவினைகளை 
புரியவைத்து பாசமாக பழக வைத்து 
பல சுவைகளை அறிய வைத்தனர் புரியவைத்தனர், 
நானாக எனக்குள்ளே யோசித்துப் பார்க்க... 
நாடா ஒன்று தேடா கிடைக்காது.
நடந்து செல்லும் வழியில் கூட, 
அமைதி தரும் சில தருணங்கள் தமக்கிடையே மொழிந்துகொண்டது! 
அதனை பார்த்தபோது நான் கேட்டேன் எனக்குள்ளே, 
"நான் ஏன் எதிர்பார்க்கிறேன் ?",என்பதற்கு 
விடை தெரியாவிடினும் தவறில்லை! 
திரும்பிப்பார்க்க கூடாதென்று முடிவெடுத்தேன். 
கண் முன் தெரியும் ஒவ்வொரு நிகழ்விலும், 
நிழல் அகற்றி பார்க்க முயன்றேன். 
கனவென்பது கடந்து போனது. 
வாழ்வென்பது புரிய தொடங்கியது. 
"நான் யார் என்று நான் அறிந்தால் போதும்."
ஆம், விடையும் கிடைத்தது விடிவதற்குள்! 
தொலைந்து சென்ற ஆனந்தங்கள் கூடிவர உணர்ந்தேன். 
பெருகிநின்ற பிரச்னைகளெல்லாம்  பிரிந்து 
செல்வதை கண் முன்னே பார்த்தேன். 
கலங்கி நின்ற கண்களைத் துடைத்தபின்பு, 
பார்த்தேன் மரையிதழ் படிந்த குளத்தை! 
தெரியாத கவலையில்லை மறக்கமுயன்றேன், 
புரியாத வாழ்க்கைத்தன்னை அறிய முனைந்தேன் ! 



 


                                                                                               - கிரிசேஷ் குமார்  


வியாழன், 20 ஜூலை, 2017

வார்த்தைகள்

வார்த்தைகள் ... ஒவ்வொன்றும் ஓர் விதம்!
ஒரு மனதை புரிந்துகொள்ள ஏற்றது,
நிலை பெற்ற உண்மை வார்த்தைகள்.
நஞ்சூட்டி பேசிடும் வார்த்தைகளெல்லாம்,
இழந்துவிடும் அதன் மொழியின் உயிரை!
அவற்றை கையாளுவது ஓர் அரிய கலையென்பேன் நான்.
தோன்றுவதெல்லாம் பேசவிடாமல்  - நின்று
பொறுமையுடன் பொருந்துவதை கோர்த்து பேசினால்,
கடலலை போல் பொங்கும் அன்பு தன் நிலைகுறையாது.
கடைப்பொழுதில் காட்டும் சிரிப்பில் தெரியும்,
கவிதையாய் பொழியும் உயிர்பெற்ற வார்த்தைகள்.
வளைவு சுழிவு தெரிந்து பேசுவது சில,
வழியே இல்லாது பேசுவது பல.
கசங்கிப்போன நெஞ்சில் கூட -நிற்கும்
கனிவாக நாம் பேசும் சிறு வார்த்தைகள்.
கண் விழித்து பார்க்கும் பொழுது,
கனவாக களமிறங்கும் மொழிக்கதைகள்.
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள் பல இங்குண்டு,
அவற்றை எடுத்துக்கோர்க்கும் பாங்கினை,
சிறுகதையாக உணர்த்தும் வாழ்க்கை நமக்கு!
பிறர் மனம் உமியளவும் புண்படாமல்,
வாய் பேசும் வார்த்தைகள் பொய் என்று,
கண் காட்டும் வடிவம் சில நான் உணர்ந்தேன்.
கரைந்தோடும் கற்பனையாக கண்முன்னே,
ஒழிந்திருக்கும் வழிமுறைகள் பல உள்ளது.
காதலுடன் மொழியும் வார்த்தைகள் கூட,
கவி பெற்று அவை பேசும் வாய் திறந்து ...!




                                                                                - கிரிசேஷ் குமார்

சனி, 15 ஜூலை, 2017

காலத்தை கடந்த பெண்

நிழலில் வாழ்ந்த நதிமீனும், 
நீந்தி கடந்தன நிகளிருள் காலங்களை. 
ஆணின் அடிமை என்றழைக்கப்பட்ட அவள், 
அச்சாணியாக விளங்கும் நாட்கள் மலர்ந்தன. 
அடிபட்டு வீட்டினுள் முடங்கியவள்தான் -இன்று 
ஆசைப்பட்டதும் வெளியே வந்தால் துணிவாக. 
சமம் என்ற ஓர் வார்த்தை அன்று, 
வெறும் வார்த்தையாக இருந்தது. 
ஆனால், அதே சமம் என்ற வார்த்தை -இன்று 
உயிர் பெற்று எழுந்து நிட்கின்றது. 
எதிலும் குறைவானவள் அல்ல அவள், 
ஆணுக்கு நிகராய் எதையும் சாதிக்கும், 
மனவலிமை பெற்றவளாவாள் அவள். 
முதன்முதலில் இவ்வுலகை வியந்து பார்த்த அவள், 
இவ்வுலகம் அவளை திரும்பிப்பார்க்க செய்தாள் நின்று. 
நிழலுலகில் இருளாக  நின்றவள் அன்று ,
நித்தமும் திளைக்கிறாள் புகழ் நடுவில் இன்று. 
நித்தம் கண்ட கனவுகள் அனைத்தும் ,
மொத்தமாக அவற்றை செயல்படுத்தினால் இன்று. 
முறைவாசல் செய்துஇருந்த அவளை, 
முறை மாற்றி வளர்த்தான் அவள் தந்தை ஒருவன், 
பின் தோள் கொடுத்து நின்றான் அவள் கணவன் மற்றொருவன். 
இத்தனை காலம் அவள் முகம் பாரா அந்நிலவு, 
வெட்கத்தில் குனிந்தது அவள் மதி ஒளியைக் கண்டு. 
அடிமைப்பெண்ணாக இருந்த அவள் அன்று,
ஆளும் அரசியாக திகழ்கிறாள் அவள் இன்று .




                                                                                                     - கிரிசேஷ் குமார்     

திங்கள், 10 ஜூலை, 2017

ஓர் உள்ளத்திற்கு !

நொடி முள்ளாய் பறந்து செல்ல,
நேர்கோட்டில் நடந்து பார்க்க,
நுனிமுகத்தில் சிரிப்பை காட்ட,
நினைத்தவுடன் மனம்விட்டு பேச,
நின்மனதில் நான் வந்து நிற்க,
நினைவெல்லாம் உன்முகம் பதிய,
நிழல் என்னைத் தொடர்வதை சற்று 
நானும் பார்த்து ஊக்கமடைய,
நேரம் தந்த சுழற்ச்சி என்னுள்,
நிற்காமல் என்னை நகர வைத்து,
நீட்டிய கரத்துடன் நீ என்னை அணைக்க,
நித்தமும் விரும்பினேன் உன் அன்பிற்காக!





                                                                                                     - கிரிசேஷ் குமார்



வியாழன், 6 ஜூலை, 2017

மனம் பேசும் வார்த்தைகள்

எனக்கு பிடித்த முகம் அது!
ரசித்துள்ளேன் அதனை சில நாட்கள்,
கவலைகள் பல மறந்தேன் அதை பார்த்தவுடன்,
குளிர்ந்தது என் உள்ளம் கடலென பரவி,
கடந்து செல்லும் முகமல்ல அது!
பார்த்தேன் என் சிரிப்பை அம்முகத்தில்,
பகிர்ந்தேன் என் மனநிலையை முழுமையாக,
இன்று என்னுடன் இல்லை அம்முகம்...
தேடுகிறேன் அதனை கண்முன் தெரிந்தும்,
விடை கிடைக்கவில்லை.....
"ஏன்?", என்ற வினாவிற்கு மட்டும்.
விரும்பா வார்த்தைகள் சில கசிந்த பிறகு,
கசப்பூட்டியது என்னுள்ளத்தில் ஆழ்ந்து,
பின் தோன்றவில்லை அதை பார்க்கும் எண்ணம்.
ஆனால், இன்னும் என் மனம்
விலக மறைக்கிறது ...விலக்க மறுக்கிறது அதே முகத்தை! 





                                                                                              - கிரிசேஷ் குமார்



திங்கள், 3 ஜூலை, 2017

நான் என் மனதின் முகமா.....?

சிறைப்பட்டேன் அகத்தின் அடியில்,
ஆசைப்பட்டேன் மீளா அடைக்கலம் அடைய,
திகைத்து நின்றேன் என்னை அறியாது,
மனம் பேசா செயல் பல கண்டேன்,
மறை சூளுரை பற்பல கடந்தேன்,
மாசடைந்த மேகமது வீழ்த்தியது, 
அதன் அகத்தை தூய்மையாகி, 
மாரி பொழிந்த மழையாக இனிமையாய்! 
மடமை அறிந்த அந்த மனதின்,
முகமாக இடம்பிடிப்பது நானாக விரும்பி,
மாறுபட்ட சிந்தனைகள் சில உணர்ந்தேன், 
சிலிர்த்திடும் உண்மைகள் என்பதனை, 
பார்த்து ரசித்தேன் ஒரு சிறு ரசிகனாய். 
"நான் யார் ?", என்ற கேள்வி ஒன்றை 
கேட்கிறேன் எனக்குள் நானே. 
விடை அறியாது வினவினேன், 
வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து, 
வெற்றியின் முதல் அடி நோக்கி, 
சட்டென்று நகர்ந்து செல்ல...



                                                                                           - கிரிசேஷ் குமார்  


வெள்ளி, 30 ஜூன், 2017

அந்த முகம்

தவறுணர்ந்தேன் நான் ஒரு நாள், 
தவித்தெழுந்தேன் திகைத்துநின்று -அன்று 
பெரும் தவம் செய்துள்ளேன் போலும், 
மறைந்த போன பிறவிகளனைத்தும், 
அந்த முழுமதி இத்தருணம் என்னுடன் இருக்க... 
நீண்ட பிரிவின் பின் பேசினேன் என்னுள்ளே, 
பிரிந்து திரிந்த ஆறுகள் சங்கமிக்கும் கடலிடையே 
அன்புடன் அவளுடன் - உற்சாகம் குறையாது 
செயல்பட்டேன் மனதில் அவள் முகத்தை பார்த்து. 
திரும்பியது அவள் பார்வை என்மேல், 
கதிரவனை பின்தொடரும் நிலவாக... 
என்னை அவளிடம் பகிர்ந்துகொள்ள, 
நின்றேன் கண் கசக்கி என்னை அறியாமல், 
கரம் கொடுத்து ஊக்கமூட்டியவள், 
வந்தால் அவள் என் கண்முன்னே, 
என்றும் கலையாத பகற்கனவாக !




                                                                                                                 - கிரிசேஷ் குமார்    

வெள்ளி, 16 ஜூன், 2017

நான் காதல் கொண்ட மழைத்துளி !

சிடு சிடு மழையே நீ- உன்னைக்கண்டு 
மறந்தேன் இவ்வுலகை யோசிக்காமல், 
சட்டென்று என் மனதில் இருந்தும்.
உன்னைக் காணவே தவம்கிடந்தேன், 
ஏமாந்து போனேன் உன்னில் கண்ட ,
என் முகத்தைப் பார்த்த அந்நொடியிலே! 
வந்தாய் கடல் மெத்தையில், 
நான் தேடி அலைந்தும் கிடைக்காத, 
வெண்மேக முத்தாக என் கண்முன்னே. 
நீ செய்த மாயம் - மறைத்தது 
பல மென்னழகிய பெண்களை, 
எனது கண்முன்னே தெரிந்தாலும்... 
உன் அழகென்னை மயக்கியதைப் போல், 
வேறு எந்த மாதுவிடத்திலும்,
அவ்வளவு எளிதாக மயங்கிலேன் நான்! 
நீ வந்து விழுந்தாய் என் உச்சந்தலையில், 
நீந்தும் சிறு மீனாய் பாய்ந்தாய் என்னுள், 
அடிபட்ட மனம் கூட திகைத்து நின்றது! 
கவலை என்று பெயர் கொண்ட ஒன்று, 
சிதறியது நீ வந்த அந்த ஓர் கணத்தில், 
ஆசைப்பட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள, 
நனைத்துவிட்டாய் என்னை முழுமையாக !!!




                                                                                              - கிரிசேஷ்  குமார்  

திங்கள், 12 ஜூன், 2017

மயங்கும் கனவு

கனவில் கலையாத கலைமீன், 
கடற்காற்றில் மிதந்து வந்து ,
செங்கரு முகில்மேலே படர்ந்து, 
சில்லென வீசும் தென்றல் அது, 
தாரகை என நம்பவைத்தது என்னை, 
எந்தன் மனம் பறிபோனது உன்னிடம், 
கரைந்து செல்லும் கடல் உப்புகூட, 
கால் பதித்தது எனது மனதில், 
குழலோசை கேட்க ஆசைப்பட்டுக் கிரங்கி, 
கருங்குயிலின் இன்னிசையைக் கேட்டு, 
மெய்மறந்து இரசித்தேன் அவளை, 
நான் அன்று முதன்முதலாக....!



                                                                                                 - கிரிசேஷ் குமார்